கோபி,
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் வாரச் சந்தை வளாகத்தில் வசித்து வரும் நாடோடி இன மக்கள் 3 ஆண்டுக்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட குடிமனை பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டனர்.

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சந்தைப் பேட்டையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகபும் பூம் பூம் மாட்டினத்தவர்கள், நரிக்குறவர்கள் என 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு அளுக்குளி கிராமத்தில் குடிமனைபட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு பட்டா வழங்கி 3 ஆண்டுகளாகியும் பட்டாவில் கண்டுள்ள இடத்தை இன்னும் நிலஅளவை செய்து கொடுக்கவில்லை. இதனால் அச்சமூகத்தினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவில்லை. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று வருவாய் தீர்வாயப் பணி முகாம் நடைபெற்றது. அ

ப்போது, மேற்குறிப்பிட்ட நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். இதில் தங்களுக்கு வழங்கப்பட்ட குடிமனை பட்டாவில் கண்டுள்ள இடத்தை போர்கால அடிப்படையில் நில அளவை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இவர்களது கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் பட்டா வழங்கிய இடத்திற்கு செல்லவில்லை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, பட்டாவில் குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்து வீட்டுமனைக்கு நிலம் ஒதுக்கீடு செய்து தரச்சொல்லி பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

ஆனால், இப்பிரச்சனை தொடர்பாக இதுவரை எவ்வித மனுவும் வரவில்லை என்று வட்டாட்சியர் பூபதி தெரிவித்ததால், ஆவேசமடைந்த நாடோடி இன மக்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து இன்னும் 15 நாட்களுக்குள் பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அனைவருக்கும் வீட்டுமனைக்குரிய நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாவட்டவருவாய் அலுவலர் கவிதா உறுதியளித்தார். இந்த உறுதிமொழியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: