திருவாரூர்:
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலினத்தவர் 2 பேரை படுகொலை செய்த சாதி ஆதிக்கச் சக்தியினரைக் கண்டித்து ஜூன் 5 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு
முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 30
அன்று திருவாரூரில் மாநில துணை தலைவர் ஜி.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாநில துணை பொதுச் செயலாளர்கள் யு.கே.சிவஞானம், த.செல்லக்கண்ணு,சின்னைப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கச்சாநத்தம் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடும் தாக்குதலை கண்டித்தும், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், கொடுங்காயம் ஏற்படுத்தப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

குற்றவாளிகள் அனைவரையும் கைதுச் செய்ய வேண்டும். இதற்கு முன்பு பலமுறை தலித்துகள் கொடுத்த புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையினரை கண்டித்தும் ஜூன் 5 அன்று சென்னை, மானாமதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி,திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, நீடாமங்கலம், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கும்பகோணம், உடுமலைப்பேட்டை, ஈரோடு,விழுப்புரம், பொன்னேரி, வேலூர் மற்றும் ஓசூர் ஆகிய 18 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: