புதுதில்லி:
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு அரசாணையின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ராஜீவ் ஷக்தேர் பிறப்பித்த உத்தரவில், முறையீட்டை மனுதாரர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதன்படி செவ்வாயன்று மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் முறையிட்டார்.

அப்போது ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று சம்பவ இடங்களில் ஆய்வு செய்வார்கள்.துப்பாக்கிச் சூடு பற்றி மட்டும் அல்லாமல் போராட்டக்காரர்கள் மீதான பொய் வழக்குகள்,

சட்டவிரோதமாக அடைத்து வைத்த விவகாரம் மற்றும் இதர மனித உரிமை மீறல்கள்
உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிப்பார்கள்.இந்த குழுவானது இரண்டு வாரத்தில் விசாரித்து இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கும். அதனைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.