திருநெல்வேலி:
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் 30ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று சங்கரன்கோவிலில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு கேட்டு   செவ்வாய்க் கிழமையுடன் 30 ஆவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்  செய்தனர். இதனால் ரூ. 15 கோடி மதிப்பில் உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது. இதற்கிடையே  திங்கள்கிழமை 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை பாளையங்கோட்டை திருமால்நகரிலுள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்றது.

தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா, உதவி ஆணையர் அப்துல்காதர் சுபேர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற  இப்பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல்,  புதன்கிழமை (மே 30)  மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன், விசைத்தறி தொழிலாளர் சங்கத் தலைவர் மாடசாமி, செயலாளர்  ரத்தினவேல், பொருளாளர் ஆறுமுகம்,  உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர்  சுப்பிரமணியன், சிந்தாமணி, புளியங்குடி விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.