திருவாரூர்:
இந்திய நாட்டை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழைகளுக்கு எதிரான அரசு மட்டுமல்ல; கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் சொத்துக்களை அதிகரித்துக்கொள்ளவும் துணைபோகின்ற ஒரு மக்கள் விரோத அரசு என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.விஜயராகவன் குற்றம் சாட்டினார்.
திருவாரூரில் திங்கட்கிழமையன்று (மே 28) சங்கத்தின் தமிழ்நாடு மாநில 9-வது மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:
நாம் தற்போது மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் மிகமிக மோசமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உழைப்பாளி மக்கள் மீதான தாக்குதல் என்பது பல முனைகளிலும் பல வடிவங்களிலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏழை மக்கள் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

நவீன தாராளமயம் எனும் தேசவிரோதக் கொள்கையின் காரணமாக ஏழை பணக்காரர்களிடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள 1 சதவீதம் பெரும் பணக்காரர்கள்; இவர்கள், நாட்டின் மொத்த செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு அதிபதிகளாக மாறி 11 சதவீதம் தங்களின் சொத்துக்களை உயர்த்தி கொண்டுள்ளனர். 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் 27 சதவீதம் சொத்துக்களின் உயர்விற்கு அதிபதிகளாகி உள்ளனர். ஆனால் மத்திய அரசு, தங்களின் ஆட்சிகாலத்தில் தனிநபர்களின் வருமானம் அதிகரித்துள்ளது என்று பொய் சொல்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துவருவதாகவும் கூறுகிறது. பெரும் பணக்காரர்களின் வளர்ச்சியைத் தான் அப்படிச் சொல்கிறது.

வஞ்சகம்
இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஏழை எளிய மக்களின் சமூக பாதுகாப்பு நல திட்டங்கள் நயவஞ்சகமாக அழிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக மக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவாக இருக்கக் கூடிய பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைத்து வருகிறார்கள். விவசாய உற்பத்தி பொருளுக்கு இந்த அரசு அளித்த வாக்குறுதியின்படி விலை உயர்வு அளிக்கப்படவில்லை. மானிய விலையில் பொருட்களின் மானியங்கள் ரத்து செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் விவசாயிகளுக்கே தெரியாமல் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பொது விநியோக திட்ட பலன்களை பெறுவதற்கான ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை தந்திரமாக குறைந்து வருகிறார்கள். கல்வி நிலையங்கள் அனைத்தும் தனியார் கைக்கு மடைமாற்றி விடப்படுகிறது. கட்டண கொள்ளையின் காரணமாக உழைப்பாளி மக்களின் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக் கனியாக மாறியுள்ளது.

சுகாதாரம்
அரசு மருத்துவமனைகள் என்பது பெயரளவிற்கு இயங்கிவருகிறது. மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு ஊழியர்களாக இருப்பார்கள். ஆனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அனைத்துவிதமான சிகிச்சைமுறைகளும் தனியார்மயமாக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது உழைக்கும் மக்களுக்கு விதிக்கப்படும் 2வது மிகப்பெரிய தண்டனையாகும்.

விலைவாசி உயர்வு என்பது கட்டுக்குள் இல்லாமல் அரசின் கொள்கையால் தறிகெட்டு உயர்ந்து வருகிறது. அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இவை அனைத்திற்கும் காரணமாக மத்திய அரசின் தவறான கொள்கையால் முதலாளிகளுக்கு ஆதரவாக நாள்தோறும் ஏற்றப்படும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளது. இரவு படுக்கைக்கு செல்லும்போது ஒரு விலையும் காலை எழுந்தவுடன் வேறுஒரு விலையும் உள்ளது. ஒரு ஊருக்கு செல்லும்போது ஒரு விலையும் திரும்பி வரும் போது ஒரு விலையும் என நடுத்தர மக்களை பாடாய்ப் படுத்துகிறது.
அவசரகோலத்தில் மோடி அரசாங்கம் அறிவித்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் அனைத்துப் பகுதி மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வேலைவாய்ப்பு
ஆண்டுக்கு 2 கோடிக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று சொன்ன நரேந்திரமோடி அரசு 2 லட்சம் பேருக்கு கூட வேலைதரவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கணக்கு வழக்கு இல்லாமல் மக்கள் பணத்தை வாரி இறைத்ததன் விளைவாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடுமையான கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. 14 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் என்று மத்தியஅரசும் ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. இந்திய நாட்டில் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் உல்லாசமாக வாழக் கூடிய விஜய் மல்லையா போன்றவர்கள் தங்களது கைது செய்ய வேண்டுமென்றால் சிறைச் சாலையை நவீனப்படுத்த வேண்டும்; குளிரூட்டப்பட்ட அறைகள் வேண்டும் என்று பல கோரிக்கைகளை அடுக்குகிறார்கள். இதையும் கேட்டுக் கொண்டு வாய் மூடி பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்.

கேரள மாநிலத்தின் மாற்றுப் பாதை
இதேபோன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் கேரள மாநிலமும் உள்ளது. ஒரு அரசுக்கு துணிச்சலும் தொலைநோக்குப் பார்வையும் மக்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால் இந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு நல்ல திட்டங்களை கொண்டுவரமுடியும் என்பதற்கு கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ஒரு நல்ல உதாரணமாகும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மாதம் 600 ரூபாயாக இருந்தது. அதனைக் கூட வழங்கவில்லை. ஆனால் இடதுசாரி அரசு அந்த நிலுவைத் தொகையை நேரில் சென்று வழங்கியதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய தொகையையும் உயர்த்தி உள்ளது. இது அந்த மக்கள் கோரிக்கை வைக்காமலே செய்ததாகும்.

சமீபத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வு தலித் சகோதரர்கள் கோவில் அர்ச்சகர்களாக ஆக்கப்பட்டது ஆகும். இடது ஜனநாயக முன்னணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் உயர் சாதி என்று சொல்லப்படுகிறவர்கள் வேலைபார்க்கிற பல்வேறு கோவில்களில் தலித்துகள் குருக்களாக பணிஉயர்த்தப்படுவார்கள். தற்போதைய பாரதீய ஜனதா ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மிக கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
யோகி ஆதித்யநாத் ஆட்சி செலுத்துகிற உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.

வெண்மணித் தியாகிகளின் இந்த மண்ணிலிருந்து நாம் சபதம் ஏற்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேச விரோத பாரதிய ஜனதா அரசு தூக்கி எறியப்படவேண்டும். அதற்கு நம்முடைய அமைப்பை மேலும் பலமாக கட்டுவதும் மக்கள் போராட்டங்களை சக்திமிக்கதாக நடத்துவதும் மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இவரது ஆங்கில உரையை என்.சிவகுரு தமிழில் மொழியாக்கம் செய்தார்.
மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி “சமத்துவப் போராளிகள்” என்ற தலைப்பில் தலித் அல்லாத தலைவர்கள் குறித்து எழுதிய நூலை சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு வெளியிட மாநில பொருளாளர் வீ.அமிர்தலிங்கம் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.