சென்னை:
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 10 நாட்கள் ஆன பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை இம்மாத இறுதிக்குள் அமைக்க வேண்டுமென்று மே-18ந் தேதி உத்தரவிட்டது. இது குறித்து, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்றும் அன்றைய தேதியிலிருந்து ஆணையம் நடைமுறைக்கு வருமென்றும் குறிப்பிட்டிருந்தது.
ஏறத்தாழ பத்து நாட்கள் ஆன பிறகும் உச்சநீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

மத்திய அரசின் இந்த காலங்கடத்தும் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பிப்ரவரி 16ந் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காலக்கெடு முடிந்த பிறகு விளக்கம் கேட்பது என்ற பெரியல் மேலும் ஒன்றரை மாத காலம் இழுத்தடித்ததை தமிழக விவசாயிகள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.

அத்தகைய தந்திரத்தை மீண்டும் மேற்கொள்ளும் சதியாலோசனையில் மத்திய அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே மாத இறுதிக்குள் ஆணையம் அமைக்கப்பட்டு அது செயல்பட தொடங்கினால் தான் இந்த ஆண்டாவது ஜுன் 12ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கான நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்படும்.

எனவே, மத்திய அரசு இம்மாத இறுதிக்குள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் அது தொடர்பான இதர உத்தரவுகளையும் செயல்படுத்திட முன்வரவேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.

தமிழக அரசும், விழிப்புடனிருந்து காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு உரிய காலத்திற்குள் செயல்முறைக்கு வருவதற்குரிய கவனத்தை செலுத்த வேண்டுமென்றும், இந்த ஆண்டாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது .

Leave a Reply

You must be logged in to post a comment.