ஒரு வெற்றியின் வித்தியாசத்தில் 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாமல் போன ஐஸ்லாந்து அதற்கு அடுத்து நடைபெற்ற யூரோ கோப்பை போட்டியில் தனது பரம எதிரியான இங்கிலாந்தை தோற்கடித்து முதல் முறையாக காலிறுதி ஆட்டம்வரை முன்னேறி அசத்தியது. யூரோ கோப்பை போட்டியின் போது ஐஸ்லாந்து அணிக்கு பயிற்சியளித்தவர் தற்காலிக பயிற்சியாளரான ஒரு முழுநேர பல் மருத்துவராவார்.ரஷ்ய உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் மிகவும் சிறிய நாடு ஐஸ்லாந்து. ஐஸ்லாந்தின் மக்கள் தொகை மூன்றரை லட்சம் மட்டுமே. ஐஸ்லாந்து அணி கடும் உழைப்பாளி வீரர்களைக் கொண்ட அணியாகும். 2010-ஆண்டு உலகத் தரவரிசைப் பட்டியலில் 112-ஆம் இடத்தில் இருந்த ஐஸ்லாந்து தற்போது 22-வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பைக் காண தகுதிச்சுற்றுப் போட்டியில் தான் பங்கேற்ற ’ஐ’ குரூப்பில் முதல் இடம் பிடித்து அசத்தியது. துருக்கி, குரோசியா, உக்ரைன் ஆகிய அணிகள் ’ஐ’ குரூப்பில் இடம்பெற்றிருந்த பிற அணிகளாகும்.

கூட்டு எதிர்ப்பு ஆட்டம் என்பதே ஐஸ்லாந்து அணியின் பலமாகும். எதிரணியினரிடமிருந்து பந்தைத் தட்டிப்பறிப்பதற்கு அணி வீரர்கள் மொத்தமாக முயற்சிக்கும் முறையை ஐஸ்லாந்து அணி பின்பற்றுகிறது. இதே முறையைத்தான் கடந்த யூரோ கோப்பைப் போட்டியின் போது இங்கிலாந்திற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஐஸ்லாந்து பின்பற்றியது. நடுகளத்தில் ஐந்து வீரர்கள் அணிவகுத்து விளையாடும் முறை அணிக்கு பக்கபலமாக அமையும். அணி வீரர்களில் எட்டுப் பேரின் உயரம் 6 அடிக்கும் மேலாகும்.பந்தை அதிக நேரம் தங்கள் காலின் கீழ் வைத்திருக்க அவர்கள் விரும்புவதில்லை.இது அவர்களின் பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த உலகக் கோப்பையில் அதிசயம் நிகழ்த்தக் காத்திருக்கிறது ஐஸ்லாந்து.

ஐஸ்லாந்து :                 உலகக் கோப்பையில் முதல் முறை
பயிற்சியாளர்:             ஹெய்மர் ஹால்க்ரிம்ஸன்
அணித்தலைவர்:        ஆரோன் குன்னார்ஸன்                                                                      விளையாடும் முறை:    4-2-3-1
முக்கிய வீரர்கள்:       கில்பி ஸிகுர்ட்ஸன், ஆல்பிரட் ஃபின் பெகாஸன்,                                                                    ஜொஹான்பர்க் குட்முன்ஸன், ராக்னர் சிகுர்ட்ஸன்.

12-வது உலகக்கோப்பை:

12-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் 1982-ம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது.இதற்கு முன் நடைபெற்ற 11 உலகக்கோப்பை தொடரை விட ஸ்பெயினில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் அதிக பொருட் செலவோடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 16-லிருந்து 24 ஆக உயர்த்தப்பட்டு,6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றியைக் கூட பெறாத இத்தாலி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதுடன் மட்டுமல்லாமல் பல முன்ணனி அணிகளை பந்தாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மேற்கு ஜெர்மனி – இத்தாலி அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தில்,இத்தாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி புதிய சாதனையை படைத்தது.அதிக வயதில் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை இத்தாலி கேப்டனும்,கோல் கீப்பருமான டினோ ஜோப் (வயது 40) பெற்றார்.டினோ ஜோப்பின் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.

இத்தாலி அணியின் பாலோ ரோஸி 6 கோல்கள் அடித்து தங்க காலணி விருதை தட்டிச் சென்றார்.பாலோ ரோஸி 1980-ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.தடை முடிந்த பின்னர் 1982-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கி இத்தாலி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக பாலோ ரோஸி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.