சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளதாக தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் திங்களன்று (மே 28) செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியது வருமாறு:  

துணை ஆட்சியர்கள்தான் பொறுப்பா?
தூத்துக்குடியை போர்க்களம் போல் மாற்றி வைத்து விட்டு தற்போது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் இருக்கும்போது 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளனர் என்று கூறியிருப்பது ஏமாற்றும் செயல். உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அரசு முயற்சிக்கிறது. 144 தடை உத்தரவு போடும் நிலையில் துப்பாக்கிச் சூட்டிற்கு துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டனர் என்பது பகிரங்கமாக மக்களை ஏமாற்றும் செயலாகும். இது மக்களை கேலி செய்வது போல் உள்ளது. எனவே, உண்மையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டிற்கு முதலமைச்சர், ஏற்கெனவே இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடல் அறிவிப்பு
3 மாதங்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகிற சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை மே 22ந் தேதிக்கு முன்பே வெளியிட்டிருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அரசாங்கமே குற்றவாளிக்கூண்டில் சிக்கிக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடந்தால் ஏராளமான அரசு அதிகாரிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டி வரும், முதலமைச்சர் கூட தப்ப முடியாது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடுகிற ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

வேதாந்தா நிறுவனம் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானது. நீதிமன்றம் சென்று ஆலையை மீண்டும் திறப்போம் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனத்தை எதிர்த்து தமிழக அரசு ஒழுங்காக வாதாடுமா? நீதிமன்றம் உத்தரவிட்டதால் மீண்டும் திறக்க வேண்டியதாயிற்று என்று தட்டிக்கழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதிதான் இந்த மூடல் நாடகம்.

முதலமைச்சரே உண்மைகளை மறைத்து மறைத்துப் பேசுகிறார். அப்படியென்றால் யாரை நம்புவது?

இன்றைக்கும் எப்ஐஆர் பதிவு செய்து பலரைத் தேடி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டு, அப்பாவிகளை கைது செய்து குற்றவாளிகளாக மாற்றும் முயற்சி நடக்கிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடந்தால்தான் ஒரளவிற்கேனும் உண்மை வெளிவரும்.
இவ்வாறு கே,பாலகிருஷ்ணன் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: