திருவனந்தபுரம்:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தய தலைவர் முகம்மது ரியாஸ் மாநிலச் செயலாளர் உள்ளிட்டோர் ஞாயிறன்று ஆறுதல் கூறினார்.
பின்னர் முகமது ரியாஸ், தமது தூத்துக்குடி பயணம் தொடர்பாக தனது முகநூல் பதிவில் “கொன்று விடலாம், ஆனால் அவர்களை தோற்கடிக்க முடியாது” என்கிற தலைப்பின் குறிப்பிட்டுள்ளதாவது: வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 105 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. தூத்துக்குடியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். வாலிபர் சங்க தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பாலா, மத்தியக்குழு உறுப்பினர்களான நிதின் கணிச்சேரி, ஏ.ஏ.ரஹீம், ரஜீஷ், கேரள மாநில மையத்திலிருந்து எஸ்.கே.சஜீஷ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முத்து உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்றோம்.

காவல்துறை துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட இடங்களையும், அவர்களது வீடுகளையும் பார்த்தோம். துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்ட கார்த்திக் என்கிற மாணவரின் வீட்டிற்கு முதலில் சென்றோம். மகன் உயிரை நல்கியது நாட்டுக்காக எனவும், அவனது உயிரிழப்பு வீண்போகக்கூடது எனவும் கண்ணீருடன் கார்த்திக்கின் தாய் தந்தையர் தெரவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான போராட்டத்தில் வாலிபர் சங்கம் முன்னணியில் நிற்கும் என அவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு அந்த வீட்டிலிருந்து வந்தோம்.
தங்களது உயிர் மூச்சான காற்றையும், குடிநீரையும் நஞ்சாக்கும் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனக்கோரி நூறுக்கும் மேற்பட்ட நாட்களாக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். முற்றிலும் அகிம்சை வழியிலான போராட்டம். மார்ச் மாதம் 24ஆம் தேதி சுமார் இருபதாயிரம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. எந்த வன்முறை சம்பவமும் நடந்ததாக தகவல் இல்லை. ஆனால் தமிழ்நாடு அரசு, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கவே இல்லை.

அதைத் தொடர்ந்துதான் மே 22 அன்று மீண்டும் ஒரு பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்த போராட்டக்காரர்கள் தயாரானார்கள். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி முற்றிலும் அமைதியாகவே நடந்தது. பேரணி நடந்த 7 கிலோமீட்டர் தூரத்தில் எந்தவிதமான வன்முறையோ, நாசநஷ்டங்களோ ஏற்படவில்லை. அந்தப் பேரணிக்கு எதிராகத்தான் தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தி காவல்துறையினர் சுட்டனர். சாதாரண உடையணிந்த காவல்துறையினர் தொலைநோக்கியுடன் இணைக்கப்பட்ட துப்பாக்கிகளால் ஸ்னைப்பர்களாக செயல்பட்டு சுட்டுள்ளனர். போராட்டத் தலைவர்களை தேடிப்பிடித்து கொலை செய்யவே இந்த ஏற்பாடு. இறந்தவர்களில் ஸ்னோலின் என்கிற பதினேழு வயதுள்ள பெண்ணும் உள்ளார். துப்பாக்கி குண்டு அவரது தலையை துளையிட்டு மறுபக்கம் கடந்து சென்ற நிலையில் அவரது சடலம் காணப்பட்டது. அவரது வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கூறினார்கள், “ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடாமல் தங்களது மகளின் சடலத்தை மூட மாட்டோம்” என்று.
எதற்காக தமிழ்நாடு அரசு இத்தனை பெரிய மக்கள் போராட்டத்தை ரத்தத்தில் மூழ்கடித்துக் கொல்ல முயற்சிக்கிறது என்கிற கேள்விக்கான விடை எளிதானது… மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உற்றதோழன் வேதாந்தா என்கிற கார்ப்பரேட்.

Leave a Reply

You must be logged in to post a comment.