மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 4 ஆண்டுகளைக்கடந்து 5 வது ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளதாக பக்கம் பக்கமாக நாளேடுகளில் அரசு விளம்பரம் செய்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாயை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவேன் என்று கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி கூறினார். ஆனால் நான்காண்டுகள் கடந்த பிறகும் இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.

இது முதல்தோல்வி. கறுப்புப்பணத்தை ஒழிக்க உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் தடாலடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் எவ்வளவு கறுப்பு பணம் சிக்கியது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. பொருளாதார ரீதியாக இது மற்றொரு தோல்வி. பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையை உயர்த்தியதும் இந்த அரசின் சாதனைதான். ஏழைகளுக்கு மானியங்கள் அளிக்கப்பட்டுவருவதாக விளம்பரங்களில் அரசு தம்பட்டமடித்துக்கொள்கிறது. மறுபுறம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அவ்வப்போது ஏற்றிக்கொண்டே இருக்கிறது. இப்படி நாள்தோறும் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்ற 11
லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை திருப்பிச் செலுத்த மறுக்கும் பெருநிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்ய மறந்து விடவில்லை.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு உற்பத்தி விலை வைத்து கொள்முதல் செய்யப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. புயல், மழை, வெள்ளம், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ள நிலையில் அவர்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது அல்லது நீண்டகாலக் கடனாக மாற்றியமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக வங்கிக் கடன்களை வசூலிக்க ஜப்தி நடவடிக்கையைத் தீவிரப்படுத்துகிறது. விவசாயத் துறையை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதிலும் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதை காஷ்மீரின் நிலைமைகள் உணர்த்துகின்றன. கடந்த நான்காண்டுகளில் எல்லையிலும் அமைதியில்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வித்துறை சீரழிக்கப்பட்டது. வரலாற்று ஆய்வுகளை இந்து மதம் சார்ந்த புராணங்களோடு இணைப்பது, மத்திய பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட நபர்களைத் துணைவேந்தர்களாக நியமிப்பது நடந்தது. பொருளாதாரம், கல்வி, வெளியுறவு, வேளாண்மை, வேலைவாய்ப்பு என அனைத்துத்துறைகளிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. இதற்கு அரசின் புள்ளி விவரங்களே சாட்சியாக உள்ளன. ஆனாலும் மோடி அரசு தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருக்கிறது… வெட்கக்கேடு!

Leave A Reply

%d bloggers like this: