திருவாரூர்,
தமிழக கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக – அவர்களது நலன் காக்கும் புரட்சிகர இயக்கமாக திகழ்ந்துவரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 9வது மாநில மாநாடு திருவாரூரில் மே 28 துவங்குகிறது. மாநாட்டின் நிறைவில் மே 30 அன்று நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பேரணி – பொதுக் கூட்டத்தில் திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் பங்கேற்று உரையாற்றுகிறார்.

மாநாடு தொடர்பாக திருவாரூரில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 25 கோடி விவசாயகூலித்தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 1990 ஆம் ஆண்டுகளில் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 200 நாட்கள் இவர்களுக்கு வேலை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது 30 நாட்கள் வேலை கிடைப்பதென்பதே மிகவும் அரிதாக உள்ளது. 2006-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் தனிச்சட்டமாக உருவாக்கப்பட்டது.

2006-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட இந்த சட்டத்தின் முக்கியமான விதி வறட்சி காலங்களில் 100 நாட்களைத் தாண்டி 150 நாட்கள் வரைவேலை தர வேண்டும் என்பதாகும். ஆனால் இதுவரை இது அமல்படுத்தப்படவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்பந்தத்தின் காரணமாக இந்த திட்டம் தேவையில்லாத ஒன்று எனவும், அரசிற்கு நிதிச் சுமையை ஏற்படுத்துவது என்றும் கூறி 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோடி அரசாங்கம் நிதியை வெட்டி சுருக்கியுள்ளது. தமிழகத்தில், 100 நாள் வேலைத்திட்டம் என்பது 20 நாட்கள் கூட கிடைப்பதில்லை. அதிமுக அரசு கடந்த ஜனவரிமாதம் 5 ஆம் தேதியன்று 110-வது விதியின் கீழ் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சுமார் 1000 விற்பனை மையங்களை தலா 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதென்றும் அதற்காக 600 கோடி ரூபாயை 100 நாள்வேலைத் திட்ட நிதியில் இருந்து திருப்பி விடுவதென்றும் அறிவித்துள் ளது. இது முற்றிலுமாக சட்ட விரோதமான நடவடிக்கையாகும்.

538 பேரூராட்சிகள்தமிழ்நாட்டில் இருப்பது போல பேரூராட்சிகளின் எண்ணிக்கை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ் நாட்டிலுள்ள 538 பேரூராட்சிகளில் தலா 5000 கூலித்தொழிலாளர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட 25 லட்சம் பேர் கணிசமான எண்ணிக்கையில் கூலிவேலையில் ஈடுபடுகின்றனர். பேரூராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டம் இல்லை என்பதால் இவர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். எனவே நீதியின் அடிப்படையில் பேரூராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தி இந்த தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் நிலச் சீர்திருத்த சட்டம் என்பது முறையாக அமல்படுத்தப் படவில்லை. செல்வந்தர்கள் பலரும் பல்வேறு பெயர்களில் பினாமியாக நிலங்களை பகிர்ந்து வைத்துக் கொண்டுள்ளனர். அதுபோல கோவில், மடங்கள் என பலவற்றிற்கும் சொந்தமான நிலங்கள் ஏக்கர் கணக்கில் இருக்கிறது. இந்த நிலங்களை நிலச்சீர்த்திருத்த சட்டத்தின்படி ஏழை எளியோருக்கு பிரித்து வழங்க வேண்டும். அதே போல அவர்கள் வசிக்கும் இடத்தையும் வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டும். இவ்வாறு தேவையுள்ள 50 லட்சம் பேரில் சுமார் 16 லட்சம் பேர் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.

இத்தகைய பின்னணியில் தமிழக கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான போராட்ட வியூகங்களை வகுப்பதற்கும் அவர்களை மேலும் மேலும் அணி திரட்டுவதற்கும் மாநில மாநாடு திருவாரூரில் கூடுகிறது. மாநாடு மே 28 திங்களன்று மாலை 4 மணியளவில் மாநாட்டின் முதல் நிகழ்வாக தியாகிகள் நினைவு ஜோதி – கொடி பயண வரவேற்பு நடக்கிறது. இதையடுத்து திருவாரூர் ஏகேஎம் டவரில் அமைந்துள்ள வேதாரண்யம் தோழர் சி.பொன்னுசாமி நினைவரங்கில் பொது மாநாடு துவங்குகிறது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமையேற்கிறார். மத்தியகவுன்சில் உறுப்பினர் ஏ.மொக்கராஜ் கொடியேற்றுகிறார். வரவேற்புக் குழுத் தலைவர் ஐ.வி.நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டைத் துவக்கி வைத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.விஜயராகவன் உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் ஜி.மணி, பொருளாளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் அறிக்கைகள் சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.