ஈரோடு,
மழைநீரை நல்ல முறையில் சேமித்து பயன்படுத்தினால் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அளிக்க முடியும் என நீர் மேலாண்மை வல்லுநர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் பி.சுந்தரராஜன் வரவேற்றார். இக்கருத்தரங்கில் நீர் மேலான்மை வல்லுநர் சிவசுப்பிரமணியன் பங்கேற்று பேசுகையில்:- ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு தேவைப்படுகிறது. மொத்த அடிப்படை பயன்பாடுகளுக்கு சுமார் 490 லிட்டர் தேவைப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தும் தண்ணீரில் பெரும்பாலானவை சாக்கடையில் போய்கிறது. பின் நீர் நிலைகளில் கலக்கிறது.

ஆகவே, இதற்கு நீர் சேமிப்புதேவை. குறிப்பாக, வீடுகளில் பொழியும் மழை நீரை சேகரித்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். கழிவுநீரை மறுசுழற்சி செய்து தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம். தற்போது உள்ள சுழலில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். விலைக்கு வாங்கி குடிக்கும் தண்ணீரில் முழுமையான சத்துகள் இருப்பதில்லை. இருந்தபோதிலும் வேறு வழியின்றி தொடர்ந்து பயன்படுத்துவதால் மூட்டு வலி போன்ற சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. கோடை காலங்களில் மட்டுமே சுமார் 1 லட்சம் ஆழ்குழாய் கிணறுகள் வரை போடப்படுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இதில் சேமிப்பும் தேவைப்படுகிறது.

மழை காலங்களில் நீரை நல்ல வெள்ளை துணியில் வடிகட்டி பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம். இது 6 மாத காலம் கெடாமல் இருக்கும். அளவுக்கு அதிகமாக மழை பொழிந்தால் அதனை ஆழ்குழாய் கிணறுகளில் விடலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், மழை நீரை வெயில் படாமல், வெப்பம் கடத்தாத தெர்மாகோல் போன்றவற்றை கொண்டு தண்ணீர் தொட்டி அமைத்து தேக்கி வைக்கலாம். இதனை எந்த நேரத்திலும் எடுத்து நேரடியாக பயன்படுத்தினாலும் எந்த நோய்களும் ஏற்படாது. ஆகவே, மழை நீரை நல்ல முறையில்சேமித்து வைத்து பயன்படுத்தினால்,எதிர்காலத்தில் வரும் தண்ணீர் பற்றாக்குறையை தடுத்து, வரும் சந்ததிகளுக்கு வளமான வாழ்வை அளிக்கமுடியும். இவ்வாறு அவர்கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.