கோவை,
தொழிற்சங்கங்கள் போராடிப்பெற்ற உரிமையை பறிக்கும் மோடியின் நாசகர திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள மீனாட்சி ஹாலில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட வேலை முறையை திரும்பப்பெற வலியுறுத்தி ஞாயிறன்று மண்டல அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில், ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், எச்எம்எஸ் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி, எல்பிஎப் மாநில தலைவர் ம.பஷீர் அகமது, ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் வி.ஆர்.பாலசுந்தரம், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், மாவட்டச் செயலாளர் (பொ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ், எம்எல்எப் மாநில துணை தலைவர் மு.தியாகராஜன், டிடிஎஸ்எப் சங்கத்தின் அமைப்பு செயலாளர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

முன்னதாக, இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, மத்திய மோடி அரசு நிலையாணை விதிகளில் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்ட வேலை என்ற திருத்தத்தை சேர்த்துள்ளது. இது ஒரு தொழிலாளியை வேலைக்கு நியமனம் செய்யும்போதே எவ்வளவு காலத்திற்கு அவர் வேலையில் இருப்பார் என குறிப்பிட்டு ஒப்பந்தம் போடப்படும். அந்த காலம் முடிந்தவுடன் தொழிலாளி தானாக அந்த வேலையை இழந்துவிடுவார். மேலும், இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமென்றாலும் நிர்வாகம் விளக்ககடிதத்தை கொடுத்து அவரை வேலையில் இருந்து நீக்கிவிடலாம் என்று நிலையாணை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் ஆண்டாண்டு காலம் போராடிப் பெற்ற உரிமைகளை மோடி அரசு ஒரே திருத்தத்தின் மூலம் பறிக்கிறது. தொழிலாளர்களுக்கு விரோதமான இந்த சட்டத்தை மத்திய அரசுதிரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு திருத்தம் செய்துள்ள இந்த விதியை தமிழக அரசு மாநிலவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளக்கூடாது. மேலும், மோசடியான இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பலியாகி உள்ளனர். தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது பணியிட மாற்றம் மட்டுமல்லாது கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். மேலும், இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இந்த கருத்தரங்கில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.