திருப்பூர்,
திருப்பூரில் 100 படுக்கை வசதியுடம் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் ஐந்தாயிரத்துக்கும் மேல் உள்ளன. மேலும், மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட ஜாப் ஓர்க் செய்யும் நிறுவனங்களும் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும், தென்மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் திருப்பூரில் குடியேறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனால் நகர மக்கள் தொகை 7 லட்சத்தை எட்டிவிட்டது. இதில் பெரும்பாலனோர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ வசதி உள்ளது. திருப்பூரில் கொங்குநகர் மற்றும் ஓடக்காடு ஆகிய பகுதிகளில் இரு இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் உள்ளன. இதில், ஓடக்காடு இஎஸ்ஐ அலுவலகத்தில் 2,700 பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 78,000 பேரும், கொங்குநகர் இஎஸ்ஐ அலுவலகத்தில் 70,000 ஆயிரம் பேரும் இ எஸ் ஐ சந்தாதாரகளாக உள்ளனர். இதில், சந்தாதாரர்கள் உள்ள அளவிற்கு இ எஸ் ஐ மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. இந்த இரு இ எஸ் ஐ மருத்துவமனைகளில் 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், நோயாளிகள் கூட்டம் அதிகமாகும்போது மருத்துவர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், கோவையிலுள்ள இ எஸ் ஐ க்கு சென்று மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் சிரமம் ஏற்படுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனடிப்படையில், திருப்பூரில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கான பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், இன்று வரையிலும் அந்த மருத்துவமனை வெறும் சுற்றுசுவர் மட்டும்தான் எழுந்துள்ளது.இந்த வேலைகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு ஏன் அரைகுறையாக நிற்கின்றது? என்பது தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்கங்களில் கேள்வியாக உள்ளது. இதனால், திருப்பூரில் துவங்கி பாதியில் நடைபெறாமல் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.