திருப்பூர்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து செய்த சதித்திட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.

திருப்பூரில் ஞாயிறன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து புதிது புதிதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு 2013ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார் என்று சொல்கிறார்கள். அப்படியானால் 2018 ஆம் ஆண்டு வரை இந்த ஆலையை மூட ஏன் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடும், காவல் துறை திட்டமிட்டு நடத்திய கலவரமும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக கெட்ட நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டதாகும். இது அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்று பாதிக்கப்பட்ட அனைவரும் ஒத்த கருத்துடன் சொல்கிறார்கள். ஆனால் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மிகவும் பொறுப்பற்ற முறையில் இந்த துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக காவல் துறை ஆலை நிர்வாகத்தின் கூலிப்படையாக செயல்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க அரசின் சார்பில் முதல்வரோ, அமைச்சர்கள் குழுவோ இதுவரை செல்லவில்லை. அதைவிட நாட்டின் பிரதமர் இந்த சம்பவம் குறித்து, இறந்தவர்களுக்கு குறைந்தபட்சம் வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. ஆறுதல் தெரிவித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசுவது அரசியல் கட்சிகளின் நாகரிகம், கடமை. ஆனால் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்ததற்காக அரசியல் கட்சி தலைவர்கள் மீது இந்த அரசு வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது ஜனநாயக ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?

அனைத்துத் துறைகளிலும் தோற்றுப் போன எடப்பாடி அரசு, தூத்துக்குடி சம்பவத்திலும் மிக மோசமான தோல்வி அடைந்துவிட்டது. எனவே இந்த அரசு பதவி விலக வேண்டும்.இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், காயமடைந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அந்த ஆலையின் தலைமை செயல் அதிகாரி ஆலையை இயக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். எது உண்மை? மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே இந்த ஆலைக்கு ஆதரவாக இருந்தன. இப்போதும் ஆலைக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன.

மோடி அரசு நான்காண்டுகளை முடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தனிப்பட்ட நேரு குடும்பத்தை தாக்குவதிலேயே கவனம் செலுத்தும் மோடி, ஆட்சிக்கு வரும்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். வெளிநாட்டு கறுப்புப்பணத்தை மீட்டு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வங்கிக்கணக்கில் செலுத்துவது, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது என எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.  மாறாக, சாதி, மதக்கலவரங்களையும், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், தலித்துகள், சிறுபான்மையினர் மீதான படுகொலைகளும்தான் இந்த ஆட்சியின் சாதனைகளாக உள்ளன. பெட்ரோல், டீசல் விலை இரக்கமற்ற வரிகள் காரணமாக கடுமையாக உயர்த்தப்பட்டு வருகின்றன.வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிலர் மீது மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அடக்குமுறை நடவடிக்கை மூலம் எந்த பிரச்சனையையும் தீர்வு காண முடியாது. அமைப்புகள் மீது தடை விதிப்பதையும் ஏற்க முடியாது.

காவிரி பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இப்போது அணைக்கு தண்ணீர் விட்டால்தான் ஜூன் 13ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு அணையைத் திறந்து தண்ணீர் விட முடியும். ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. காவிரி பிரச்சனையைத் தீர்க்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. இவ்வாறு ஆர்.முத்தரசன் கூறினார். இந்த பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.காளி
யப்பன், மாவட்டச் செயலாளர் எம்.ரவி, நிர்வாகிகள் எஸ்.ரவிச்சந்திரன், பி.ஆர்.நடராஜன், ரவி, ராஜேந்திரன், ஜெகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: