வர்க்க இயக்கங்களால் உரம் பெற்ற திருவாரூர் நகரில் மே 28 முதல் 30 வரை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு இமாலய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் மோடி.நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள நிலையில் வெளியிடப்பட்ட விளம்பரங்களிலும் இதே கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. கிராமப்புற உழைப்பாளிகள் சொல்ல முடியாத துன்பங்களில் உழன்று வருகின்றனர். குறிப்பாக மோடி ஆட்சியில் அனைத்து பகுதி மக்களின் துயரங்களும் பலமடங்கு அதிகரித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் திறமையின்மை தமிழக கிராமப்புற நிலைமையை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.

ஸ்டெர்லைட் படுகொலைகள் நிலைநாட்ட முயல்வது என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நம்மனதில் ஆழமான கோபமும் சோகமும் விளைவித்துள்ள தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக குரல் எழுப்பினால் இதுதான் நடக்கும் என்று அச்சுறுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அரசும் காவல்துறை போன்ற அரசு அமைப்புகளும் எந்த அளவிற்கு காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் என்பதற்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. இந்தியா முழுவதும் இத்தகைய கொடுங்கோன்மைகள் அரங்கேறுகின்றன. இது நவீன தாராளமய கொள்கைகளின் பிரிக்க முடியாத அம்சம். எனினும் உழைப்பாளி மக்கள் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை கண்டு பின்வாங்க மாட்டார்கள்என்பது நிச்சயம்!

இதே நவீன தாராளமயக் கொள்கைகள்தான் விவசாயத்துறையிலும் திணிக்கப்படுகின்றன. இதன் காரணமாககிராமப்புற உழைப்பாளிகள் கடுமையான துன்ப வாழ்விற்குள் தள்ளப்படுகின்றனர். வரலாறு காணாதவிவசாயிகளின் தற்கொலைகள் இதனை தெளிவாக்குகின்றன. காங்கிரஸ் ஆட்சியிலேயே விவசாயிகள் தற்கொலைகள் நடந்தன. மோடி ஆட்சியில் இது குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது. இதன் கொடுங்கரங்கள் விவசாய தொழிலாளர்களையும் கடுமையாக தீண்டுகின்றன. ஏற்கெனவே கிராமப்புற பொருளாதார அடுக்கில் கீழே மிதிபடும் விவசாய தொழிலாளி தற்பொழுது மேலும் வறுமையில் தள்ளப்படுகிறார். பொருளாதார சுரண்டலுடன் சாதியம் எனும் சமூக சுரண்டலும் சேர்ந்து தனது தாக்குதலை கூர்மைப்படுத்துகிறது. இந்த விஷ சூழலிலிருந்து வெளி வருவது எப்படி என்பதை விவாதித்து கொள்கைகளையும் நடைமுறைகளையும் வடிவமைக்கும் கடமை நம்முன் உள்ளது.

விவசாயத்தின் வீழ்ச்சி- இடம் பெயரும் விவசாய தொழிலாளர்கள்;
தமிழகத்தில் சிறு குறு விவசாயிகளின் எண்ணிக்கையும் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 2001ஆம் ஆண்டு 42.50 லட்சம் சாகுபடியாளர்களும் 96 லட்சம் விவசாய தொழிலாளர்களும் இருந்தனர். 2011 மக்கள் தொகை கணக்குப்படி இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2001ஆம் ஆண்டு 18.4% ஆக இருந்த சாகுபடியாளர்கள் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு 12.9%ஆக குறைந்துவிட்டது. அதே போல 31%ஆக இருந்த விவசாய தொழிலாளர் எண்ணிக்கை 29% ஆககுறைந்துவிட்டது.

ஏன் இந்த வீழ்ச்சி? விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாத போது கணிசமான விவசாயிகள் அந்த துறையைவிட்டு வெளியேறுகின்றனர். அவர்களது நிலம் நிலப்பிரபுக்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களால் பறிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைகிறது. இதன் விளைவாக விவசாயத் தொழிலாளியும் வேலை இழக்கிறார். எனினும் நிலத்தை இழந்த விவசாயி விவசாயத் தொழிலாளியாக மாறுவதால் இந்த எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்படவில்லை. இயந்திரமயமும் விவசாய தொழிலாளர்களின் வேலை இழப்புக்கு காரணமாக உள்ளது. இவ்வாறு நிலத்தையும் வேலையையும் இழந்தவர்கள் குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் தம் அடையாளங்களை இழந்து இடம் பெயர்கின்றனர். சென்னை, கோவை, திருப்பூர் போன்ற இடங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் வேலை தேடி செல்கின்றனர். அங்கு பணிப்பாதுகாப்பு, ஊதியபாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என எதுவும் இல்லை. இதன் ஒரு முரண்பாடாக சில நிறுவனங்கள் பீகார் போன்ற இடங்களிலிருந்து விவசாயத் தொழிலாளர்களை தமிழகத்தில் இறக்குமதி செய்த உதாரணங்களும் உண்டு. எனினும் இது பெரிய அளவிற்கு தொடரவில்லை.

விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தில் கடும் சரிவு;
விவசாயத் துறை நெருக்கடி காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் கடுமையாக சரிந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜனவரியில் 6.57% ஆக இருந்த ஊதியம் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் 1.67% ஆக வீழ்ச்சி அடைந்தது. விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் மட்டுமல்ல; ஏனைய கிராமப்புற உழைப்பாளிகளின் ஊதியமும் (கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட) வெகுவாக குறைந்துள்ளது. சுஜாதா குண்டு எனும் ரிசர்வ் வங்கி ஆய்வாளரின் அறிக்கைப்படி விவசாய தொழிலாளர்களின் தற்போதைய ஊதியம் கடந்த பத்தாண்டுகளின் சராசரியைவிட மிகவும் குறைவாக உள்ளது. ஏன் இந்த நிலை? விவசாயம் தொடர்பான கொள்கைகளையும், நடைமுறைகளையும் மோடி அரசாங்கம் கடுமையாக மாற்றி அமைத்துள்ளது. முதல் தடவையாக விவசாய சந்தை சீர்திருத்தங்களை வடிவமைத்து இருப்பதாகவும் அனைத்து மாநிலங்களுக்கும் இது குறித்த அறிவுறுத்தல் அளிக்கப்படும் எனவும் நிதி ஆயோக் கூறியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக விவசாயம் “உற்பத்தியை மையமாக கொண்டிருந்தது. அதனை சந்தையை மையமாக கொண்டு உருவாக்கும் காலம்வந்துவிட்டது. இந்த அடிப்படை மாற்றம் மிக அவசியம்”என கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.

இதன் பொருள் என்ன? தொழில் துறையில் சீர்திருத்தம் எனில் தனியார்மயம் என பொருள்படும். விவசாயத் துறையில் சீர்திருத்தம் எனில் விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மடைமாற்றுவது என பொருள்படும். இதற்காகவே விவசாயத்தை முதலாளித்துவ சந்தையுடன் இணைப்பதற்கு மோடி அரசாங்கம் துடிக்கிறது. இத்தகைய கேடுகெட்ட சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல; விவசாயத் தொழிலாளர்களுக்கும் பெரும் பாதகத்தை உருவாக்கும் என்பதை நாம் உணர்வதும் அத்தகைய கொள்கைகளுக்கு எதிராக நாம் இயக்கம் காண்பதும் அவசியமாகும். இத்தகைய சூழலில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் தந்தது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகும். மோடி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்தே இத்திட்டத்தை முடக்குவது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது. மேலும் சுமார் ரூ.11,000 கோடி கூலி பாக்கி உள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓரளவு நிவாரணமாக விளங்கிய இந்த திட்டமும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீட்டெடுக்க விவசாயத் தொழிலாளர்களின் வலுவான இயக்கத்தை கட்டுவது மிக மிக அவசியமாகும்.

தமிழக விவசாயத்தில் கூடுதல் துன்பங்கள்;
இந்தியா முழுதும் விவசாயம் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தமிழகத்தில் வேறு சில காரணிகளும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன. காவிரி தண்ணீர் வராததால் டெல்டா மாவட்டங்கள் கதறுகின்றன. பல ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. முப்போகம் என்பது கடந்த கால வரலாறாக மட்டுமே மாறிவிடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது. பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திட்டத்தை செயல்படுத்த காவிரிபாசனப் பகுதி தரிசாக மாற்றப் படுகிறதோ என்ற நியாயமான கேள்வியும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களிடம் எழுந்து உள்ளது. இதனை புறந்தள்ளிவிடமுடியாது.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் அந்த பகுதிகளிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டாவுக்கு காவிரி எனில் தென் மாவட்டங்களுக்கு தாமிரபரணி. இதுவும் இந்த ஆண்டு வறண்டு விட்டது. கடந்த ஆண்டுபாசன பருவத்தில் 61,934 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வெறும் 1338 ஹெக்டேரில்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2518குளங்களில் 2400 குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக தென் தமிழகத்திலிருந்தும் கணிசமான விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடி இடம் பெயர்ந்துள்ளனர். மறுபுறத்தில் தமிழகத்தில் சுமார் 12 கரும்பு ஆலைகள் இயங்காமல் உள்ளன. விவசாயிகளுக்கு கரும்பு பாக்கி தராமல் ஆலைகள் இழுத்தடிக்கின்றன. இதுவும் விவசாயத் தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.

தொழில் சார்ந்த நோய்களும் உடல் நலனும்!
விவசாயத் தொழிலாளர்களின் நலன் குறித்த பிரச்சனையில் பெரிதும் கவனிக்கப்படாமல் உள்ள அம்சம் விவசாயம் சார்ந்த தொழில் நோய்களும் பாதிப்புகளும் ஆகும். விவசாயத் தொழிலாளர்கள் தமது பணியில் பல உடல்நலன் தொடர்பான ஆபத்துக்களை சந்திக்கின்றனர். இதனை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வகைப்படுத்தியுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுமார் 40 முதல் 50% உழைப்பாளிகள் விவசாயத் துறையில் பணிபுரிகின்றனர். ஆனால் வளர்ந்த நாடுகளில் இது வெறும் 2%தான். ஆந்த்ராக்ஸ், நுரையீரல் பாதிப்பு, டெட்டனஸ் போன்றநோய்கள் விவசாயத் தொழிலாளர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. விவசாய நிலங்களில் இயந்திரங்களை இயக்கும் பொழுது விபத்து ஏற்படலாம். விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகடி என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வு ஆகும். விவசாயத்தொழிலாளர்கள் இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளை தெளிக்கின்றனர். இந்த இரசாயனங்கள் காரணமாக பல நோய்கள் உருவாகுகிறது. குறிப்பாக தோல் புற்று நோய் அதிகமாக தாக்கும் ஆபத்து உள்ளது.

கடும் வெப்பத்தில் அல்லது காற்று குறைவாக இருக்கும் பொழுது பணியாற்றினால் மயக்கம், நீர்ச்சத்து குறைதல், தோல் நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது. நெற்கதிர்கள் அடிக்கும் பொழுது அல்லது பருத்தி அறுவடை பொழுது பல துகள்கள் மூக்கு வழியாக உள்ளே சென்றுவிடும். இது நாளடைவில் ஆஸ்துமா, சுவாச நோய்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. விவசாய தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை ஊட்டச்சத்து குறைவு ஆகும். இவையெல்லாம் சர்வதேசதொழிலாளர் அமைப்பு வடிவமைத்துள்ள பட்டியலாகும்.

பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்களின் உடல்நலம் குறித்து பரவலான கவனமின்மை உள்ளது. அவர்களுக்கு வரும் வியாதிகள் அல்லது மரணம் இயற்கையானது எனும் எண்ணமே உள்ளது. இது தவறு ஆகும். விவசாயத் தொழிலாளர்களின் பணிச் சூழல்கள் காரணமாகவே இத்தகைய நோய்கள் வருகின்றன. மேற்கண்ட நோய்கள் தாக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு
சாதனங்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். உடல் நலன் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இதே போல வெள்ளம் அல்லது வறட்சி சமயங்களில் இதர கிராமப்புற உழைப்பாளிகளைவிட விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நிவாரணமும் அவர்களுக்கு முறையாக சேர்வது கிடையாது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐடுடீ) விவசாயிகளுக்கான கன்வென்ஷன்(எண் 184/2001ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேற்கண்ட பிரச்சனைகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. மத்திய அரசு இதை ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற முன்வருமா? அதற்கான அழுத்தத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.

புதிய சூழல்களும் புதிய சவால்களும்;
நவீன தாராளமயக் கொள்கைகள் சமூகம் முழுமையின் மீது ஆதிக்கம் செலுத்தியது போல கிராமப்புறங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம்ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாகவும் உழைப்பாளி வர்க்கங்களுக்கு பெரும் பாதகமாகவும் அமைந்துள்ளது. கிராமப்புறத்தில் புதிய முதலாளித்துவ விவசாயிகள் உருவாகியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல சமயங்களில் பாரம்பரிய வாரிசு அடிப்படையில் உள்ள நிலப்பிரபுக்களும் இந்த புதிய முதலாளித்துவ விவசாயிகளும் ஒரே நபராக இருக்கின்றனர். பழைய காலம் போல இல்லாமல் நிலப்பிரபுவின் சொத்து அல்லது வருமானம் என்பது நிலச்சுரண்டலிலிருந்து மட்டுமே வருவது இல்லை. விவசாயம் அல்லாதவேறு வகைகளிலும் நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் தங்களது வருமானத்தை பெறுகின்றனர்; சொத்துக்களையும் சேர்க்கின்றனர். வட்டித் தொழில், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து, சினிமா தியேட்டர்கள் போன்றவை சில புதிய வருமானம் வரும் தொழில்களாகும். இதன் மூலம் கிராமப்புற ஆளும் வர்க்கங்கள் வெறும் பொருளாதாரத் தளத்தில்மட்டுமல்ல; அரசியல், சமூக, பண்பாடு தளங்களிலும் தமது நாட்டாண்மையை நிலை நிறுத்தி தொடருகின்றனர்.

இந்த முக்கிய மாற்றத்தை நாம் உள்வாங்கிக்கொள்வது மிக அவசியம் ஆகும். அதே போல சிறு குறு விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர் வர்க்கங்களிடமும் நவீன தாராளமயக்கொள்கைகள் பல மாற்றங்களை விளைவித்துள்ளன. விவசாயத்துறை வீழ்ச்சியினால் விவசாயத் தொழிலாளர்கள் இடம் பெயர்வது நடந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக கிராமங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைகிறது. இது நமது விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்காமல் இருக்காது. கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத வேறு தொழில்களில் உடல் உழைப்பு பணிபுரியும் புதிய வகைதொழிலாளர்கள் கணிசமாக உருவாகியுள்ளனர்.

இவர்களை நாம் அணிதிரட்ட இன்னும் வலுவான முயற்சிகளை எடுக்க வேண்டும். இவர்களை தவிர்த்து கிராமப்புறஉழைப்பாளிகளை முழுமையாக திரட்டுவது இயலாது. இந்த உழைப்பாளிகளை அணிதிரட்டிட “கிராமப்புற உழைப்பாளிகள் சங்கம்” “எனும் பதிய அமைப்பை உருவாக்குமாறு வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன. விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், கிராமப்புற உழைப்பாளிகள் சங்கம்” ஆகிய மூன்று அமைப்புகளும் ஒருங்கிணைந்து கிராமப்புற உழைப்பாளிகள் இயக்கங்களை வலுவாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய நிலைமையில் விவசாயத் தொழிலாளர்களில் சரிபாதிக்கும் அதிகமாக பெண்கள்தான் உள்ளனர். பெண்களை அமைப்பாக திரட்டுவதும் அவர்களை தலைமை ஏற்கச் செய்வதும் அவசியம் ஆகும். இத்தகைய புதிய சவால்களை வெல்வது நமக்கு சிரமமான காரியம்அல்ல! புதிய சவால்களை வெல்லும் முக்கிய கடமையை நம்மால் செய்ய முடியும்.

தியாகத்தில் புடம்போட்ட இயக்கம்:
விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர்சங்கமும் தியாகம் எனும் நெருப்பில் வார்த்தெடுக்கப்பட்டஅமைப்புகள் ஆகும். நமது இயக்கம் போன்று தியாகங்களை செய்து சாதனை சரித்திரம் படைத்த வேறு எந்த இயக்கமும் இல்லை என நாம் பெருமையுடன் கூற இயலும். எவரும் அதனை மறுக்க முடியாது. நமது மாபெரும் தலைவர்கள் பி.இராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், பி. சீனிவாசராவ், ஆர்.உமாநாத், வி.பி.சிந்தன் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலில் நாம் செயல்பட்டோம். கே.ஆர்.ஞானசம்பந்தன், பி.எஸ்.தனுஷ்கோடி, எம்.செல்லமுத்து, கோ.பாரதி மோகன் ஆகிய தலைவர்களும் வழிகாட்டினர். இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் போராட்ட பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்களான தோழர்கள் என்.சங்கரய்யா, கோ.வீரைய்யன் ஆகியோரின் உழைப்பையும் தியாகத்தையும் மறக்க முடியுமா? களப்போராட்டங்களில் எண்ணற்ற தோழர்கள் தமது இன்னுயிரை ஈந்தனர். தியாகிகள் களப்பால் குப்பு, இரணியன், சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், மணலூர் மணியம்மா, சிக்கல் பக்கிரிசாமி, என்.வெங்கடாசலம், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன், கணேசன், கே.பி.நாகராசன், சத்திய நாராயணா, நாணலூர் நடேசன்,அம்பை ஆறுமுகம், இரிஞ்சூர் சின்னப்பிள்ளை, சிக்கல் ராமச்சந்திரன், கோட்டூர் ராசு, பூந்தோட்டம் பக்கிரி என இந்த பட்டியல்மிக நீளமானது.

எல்லாவற்றிற்கும் மேலாக நிலப்பிரபுக்களின் குண்டர்களால் வெண்மணியில் வெந்து மடிந்த நமது தோழர்களின் தியாகத்திற்கு உலகில் ஈடு இணை உண்டா? கிராமப்புற வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக வெண்மணி தியாகிகளின் வீரம் வழிகாட்டுகிறது. இப்போதும் கூட நன்னிலம் நாவலன் போன்ற கண்மணிகளை பறிகொடுத்துதான் இந்த இயக்கம் மக்கள் மத்தியில் போராடிக் கொண்டு இருக்கிறது.  நம்முடைய தொடர் போராட்டங்கள் காரணமாகவே நிலச்சீர்திருத்தம் ஆட்சியாளர்கள் முன்பு மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது. நமது தீவிரமான இயக்கங்கள் காரணமாகவே விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் குறித்து பல முடிவுகளை எடுக்க அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டது. இந்த சாதனை சரித்திரம் நமக்கு மட்டுமே சொந்தமானது.

நில உடமை கொடுமைகளான சாணிப்பால், சாட்டையடிக்கு முடிவுகட்டியது நமது இயக்கம். வயல்வெளி மனிதர்களை நிமிர வைத்தது நமது போராட்டம். நமது தியாகத்தையும் சாதனைகளையும் அடித்தளமாக கொண்டு புதிய சவால்களை சந்திக்க திருவாரூர் மாநாடு சிறந்த வழியை உருவாக்கட்டும். வாழ்க தியாகிகள் நாமம்!  வாழ்க விவசாய தொழிலாளர் சங்கம்! வெல்க தொழிலாளர்கள்- விவசாயிகள்- விவசாய தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமை.

கட்டுரையாளர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மத்தியக்குழு உறுப்பினர்

Leave a Reply

You must be logged in to post a comment.