கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபாகாலனி அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மேட்டுப்பாளையம், உதகை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிலையத்திலிருந்தே புறப்படுவது என்ற அடிப்படையிலேயே இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகளில் பெரும்பாலும் காந்திபுரம் பகுதியிலிருந்தே புறப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது மாநகரில் இன்னும் குறைந்தபாடியில்லை.

அதேநேரம், உதகை, குன்னூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் புதியபேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படுகிறது. அதுவும் தற்சமயம் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ள இங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் உதகை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் இப்பேருந்து நிலையத்தில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வழக்கமான கூட்டத்தை காட்டிலும் இரண்டு, மூன்று மடங்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இச்சூழலில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பேருந்து நிலையமே ஒரு பாழடைந்த கட்டிடம் போலவே காட்சியளிப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தி வருகிறது.

இடிந்துவிழும் மேற்கூரைகள்:
இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து நிற்கும் இடத்தில் உள்ள மேற்கூரைகள் அனைத்தும் உடைந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பல இடங்களில் மேற்கூரைகள் இல்லாத நிலையில், இருக்கிற மேற்கூரையும் எப்போது நம் தலையின் மீது விழுமோ என்ற அச்சத்தில் பயணிகள் பல அடி தூரம் தள்ளியே நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இவ்வாறு மேற்கூரைகள் அனைத்தும் உடைந்தும், தொங்கிக் கொண்டும் இருப்பதால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்ட கட்டிடமாக பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது.

ஆயுதம் தாங்கி நிற்கும் நடைமேடைகள்:
இதேபோல், நீலகிரி மாவட்டத்தின் அழகை ரசித்து விட்டு கோவை திரும்பி இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்குவதற்கு முன்பே அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைமேடைகள் காணப்படுகின்றன. அதாவது ஆயுதம் தாங்கி நிற்பவரைபோல் நடைமேடைகள் உடைந்து அதிலுள்ள கான்கீரிட் கம்பிகள் அனைத்தும் துருத்திக் கொண்டு வெளியே நிட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனால் பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் ஓரம் பார்த்து இறங்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதேபோல் பேருந்துகளில் ஏறும் பயணிகளும் பல்வேறு சாகசங்களை கடந்துதான் பேருந்தில் ஏற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கட்டிட விரிசலில் கசியும் நீர்
இந்த பேருந்து நிலைய வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சாலையானது ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக மிக மோசகமாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே மிக மோசமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளால் அவதியான பயணத்தை மேற்கொண்டு வரும் பயணிகள் இந்த பேருந்து நிலைய குழிகளில் பேருந்தை ஏற்றி, இறக்கும் சமயங்களில் மேலும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதேபோல், பேருந்து நிலைய கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் சிறியது முதல் மிகப்பெரும் அளவிற்கான விரிசல்கள் காணப்படுகிறது. சில இடங்களில் கட்டிட விரிசல்களிலிருந்து தண்ணீர் கசிந்து வளாகம் முழுவதும் தண்ணீர் வழிந்தோடும் நிலையும் காணப்படுகிறது. மேலும், மழைநீரும், தண்ணீரும் ஆங்காங்கே தேங்கி கிடப்பது மட்டுமின்றி, அவற்றுடன் குப்பை கழிவுகளும் சேர்ந்து கொசு உற்பத்தி மையமாக பேருந்து நிலையம் மாறி வருகிறது. இவ்வாறு போதிய பராமரிப்பின்றி கைவிடப்பட்ட பேருந்து நிலையத்தை இதன்பின்னராவது கோவை மாநகராட்சி அதிகாரிகள் கைகொடுத்து புது பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்ப்பார்ப்பு.

– ஜி.அழகுராமசந்திரன்.

Leave a Reply

You must be logged in to post a comment.