திருப்பூர்,
திருப்பூர் பெரியார் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தொடர் போராட்டத்தின் மூலம் பட்டா விநியோகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் பெரியார் காலனி பகுதியில் கடந்த 1975ஆம் ஆண்டு 334 வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளுக்கு முன் பணம் செலுத்தி, மீதி தொகையை மாத தவணைகளில் செலுத்தினர். இந்நிலையில், வீடுகளை வாங்கிய பொதுமக்கள் பத்திரங்களை பெற்ற பின்னரும், பட்டா பெறாமல் இருந்தனர்.

இதனால், மக்கள் குடியிருப்போர் நல சங்கத்தின் மூலம் கடந்த 23 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடமும், வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிலையில், இந்த வீடுகளுக்கான நிலம் என்பது நில உரிமையாளர்கள் பெயரில் வகை மாற்றம் செய்யாமல், அரசு நிலமாகவே இருந்தது. இதனால் கடந்த மே மாதம் 2 ம் தேதி நிலவகை மாற்றம் செய்து உடனடியாக பட்டா வழங்கக் கோரி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அந்த பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதற்கு முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் துணை முதல்வரை சந்தித்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படிருப்பதாக விளம்பர பலகைகள் வைத்திருந்தனர்.

மேலும், சில வீடுகளுக்கான பட்டா வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டதாக கூறினர். இதனடிப்படியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பேச்சுவார்த்தையின் போது வடக்கு வட்டாட்சியர் சுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு அது பட்டாக்கள் அல்ல, பட்டா வழங்குவதற்கான ஆணைதான் என்று கூறினர். அதுவும் வகைமாற்றம் செய்ய வில்லை என்று, அதற்கான வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றது என ஒப்புக்கொண்டார். இந்நிலையில், பெரியார் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களால் சனியன்று திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பெரியார் காலனியில் உள்ள 184 குடியிருப்புகளுக்கு மட்டும்பட்டா வழங்கினர்.மேலும், அனைத்து வீடுகளுக்குமான பட்டா தயார் நிலையில் உள்ளதாக கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.