====துரை நாகராஜன்===
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் நடைபெற்ற தொடர் போராட்டம் 100 ஆவது நாளைத் தொட்டது அந்த நாளில் தடையை மீறித் தன்னெழுச்சியாகத் திரண்டு பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர். பேரணியாகச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் வரை பலியாகியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

மக்கள் பேரணிக்கு 144 தடை விதித்து, துப்பாக்கிச்சூடு நடத்தி பெண்களையும் கூட இரக்கமில்லாமல் கொலை செய்கிறது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒரு விஷயத்தைப் பரமரகசியமாக வைத்துள்ளனர். அது ஸ்டெர்லைட் பற்றிய தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கை மார்ச் 28ஆம் தேதி தமிழக மாசுக் கட்டுப்பட்டு வாரியத்தின் சார்பில் ஸ்டெர்லைட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் அனைத்துமே மாசடைந்துள்ளன என ஆய்வு முடிவு சொல்கிறது. இதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடாமலேயே வைத்திருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல இடர்பாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் இந்த அறிக்கையை வாங்கினர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நித்யானந்த் ஜெயராமன், “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை இணைந்த குழு ஒன்று, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஏழு இடங்களிலிருந்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுங்ளள கிராமங்களில் எட்டு இடங்களிலிருந்தும் நிலத்தடி நீர் மாதிரிகளை மார்ச் 28ஆம் தேதி சேகரித்தது. இந்தத் தண்ணீரை வாரியத்தின் ஆய்வகத்தில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொன்ன அரசு, ஆய்வறிக்கை தயாராகியும், அதை ரகசியமாகவே வைத்திருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வாங்கிய இந்த ஆய்வறிக்கை, ‘நீர் மாதிரி எடுக்கப்பட்ட 15 இடங்களிலுமே, நிலத்தடி நீர் குடிப்பதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது’ என்பதை உறுதி செய்கிறது. இங்கிருக்கும் நிலத்தடி நீரில் சல்பேட், கால்சியம், மெக்னீசியம், ஈயம், ஃப்ளோரைடு போன்றவை இந்திய தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்த குடிநீர்த் தர அளவுகளைவிட மடங்கு அதிகமாக உள்ளன. குறிப்பாக குழந்தைகளின் நரம்பு மண்டலம், மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஈயமானது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட சில இடங்களில் 53 மடங்கு அதிகமாக உள்ளது. ஆய்வறிக்கையின்படி கால்சியம், சல்பேட் மற்றும் ஃப்ளோரைடு ஆகிய தனிமங்கள், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்டமாதிரிகளில் அதிகமான அளவில் உள்ளன. ஆலை வளாகத்தில் குவிந்து கிடக்கும் திடக்கழி-வகளைச் சரியான முறையில் கையாள வேண்டும். அதைச் செய்யாவிட்டால், கால்சியம், சல்பேட் மற்றும் ஃப்ளோரைடு போன்ற ரசாயனங்கள் கசிந்து சுற்று வட்டாரத்தில் இருககும் ரசாயனங்கள் கசிந்து சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீரை மாசுபடுத்தக்கூடும்.

கடந்த முறை ஸ்டெர்லைட் உரிமம் ரத்து செய்யப்பட்ட போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை எதிர்த்து அந்த ஆலை வழககு தொடர்ந்தது. அப்போது, ஸ்டெர்லைட் பல ஆவணங்களைக் கொடுத்தது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 16 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் குறைவான அளவில் மாசு இருந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய ஆய்வானது, ஸ்டெர்லைட்டின் வாதத்துக்கு நேர்மாறாக உள்ளது. ஆய்வில் காட்டப்பட்டுள்ள 32 முடிவுகளில் 31 முடிவுகளில் உப்பின் அளவானது நிர்ணய தர அளவைவிட அதிகமாகக் காணப்பட்டுள்ளது. 32 தனிமங்களைக் கண்டறியும் முடிவுகளில் 30 முடிவுகளில் சல்பேட்டும், ஆறு முடிவுகளில் ஃப்ளோரைடும், 31 முடிவுகளில் கால்சியமும், 30 முடிவுகளில் மெக்னீஷியமும், 28 முடிவுகளில் இரும்பும், அவற்றின் நிர்ணய அளவைவிட அதிகமாக உள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள்ளும், அருகேயுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்திப்பதை ஆய்வில் அறிந்தும் அறிக்கையை ரகசியமாக வைத்துள்ளது. இது மக்களுக்கு எதிரான அரசின் போக்கையே காட்டுகிறது” என்றார்.

இதுபற்றிப் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், “நச்சுப் புகையைக் கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என 100 நாள்களாகப் போராட்டம் நடத்தும் மக்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வில்லை. ஊர்வலத்திற்க அனுமதி தரவில்லை. நள்ளிரவில் வீடு புகுந்து போராட்டக்காரர்கள் பலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். இப்படியெல்லாம் போராட்டத்தை முடக்க அரசு நடவடிக்கை எடுத்ததால்தான், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அமைதியான முறையில் போராட்டத்தையும் நடத்த அரசு அனுமதித்திருந்தால் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது, தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையை மறைத்து, ஸ்டொலைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு மக்களிள் உயிரைக் குடித்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோரைப் படுகாயப்படுத்திவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று இந்த அரசு பதவி விலக வேண்டும்” என்றார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த ஆய்வின் முடிவுகள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைந்துள்ளன. அதை வெளியிட விரும்பாத தமிழக அரசு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இந்த அரசு மக்களுக்கானதா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதா?

Leave a Reply

You must be logged in to post a comment.