சென்னை:
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மே 28 அன்று கண்டனம் முழங்குமாறு சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோய்க்கு ஆளாகி இறந்துள்ளனர். காற்றையும், நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக மக்கள் போராடி வருகின்றனர். இப்பிரச்சனையில் எவ்வித தீர்வும் ஏற்படாத வகையில், கடந்த 2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற மக்கள் மீது காவல்துறை தீவிரவாதிகளை சுட்டுக் கொல்ல பயன்படுத்தும் துப்பாக்கிகளை கொண்டு சுட்டனர்.

இதில் பெண்கள், இளைஞர், முதியோர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடி வருகின்றனர். காவல்துறை தினசரி ரோந்து என்ற பெயரில் வீடுகளில் புகுந்து அராஜகமான முறையில் பொதுமக்களை கைது செய்து காவல் நிலையங்களில் வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.
காவல்துறையின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராடி வருகிறது. எங்களது போராட்டத்தை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.

சேலம், வடசென்னை போன்ற மாவட்டங்களில் போராடிய தோழர்களை கடுமையாக தாக்கி அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். மதுரை புறநகர் பகுதி திருமங்கலம் நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை காவல் துறை அராஜகமான முறையில் கிழித்தெறிந்துள்ளனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது, சர்வாதிகார சிந்தனை கொண்டதாகும்.

எனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். துப்பாக்கிச் சூட்டை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பதவி விலக வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி மே 28 அன்று மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்டக்குழுக்கள் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Leave A Reply