===ஜி.ராமகிருஷ்ணன்===
‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டதுதான்; துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடப்படவில்லை; கலவரத்தில் எதிர்வினையாகத்தான் நடந்தது’’ என்று தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி கொடுத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதுதான் உண்மையா?

அவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தூத்துக்குடிக்கு துணை ராணுவம் அனுப்பப்படும் என்றது மத்திய அரசு. கமாண்டோ படைகள் தூத்துக்குடியில் மக்கள் குடியிருப்புகளை சூழ்ந்து நின்றன. நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய வசதி துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் தான் ஏதும் அறியாதவர் போலவும், தூத்துக்குடி மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் 144 தடை உத்தரவு இருப்பதால்தான், காயமடைந்த மக்களைப் பார்க்க தான் செல்லவில்லை என்றும் பேட்டி கொடுத்தார் முதலமைச்சர். தவறான தகவல்கள், உண்மையற்ற காரணங்கள் என பேசிக் கொண்டே, திட்டமிட்ட அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.

அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்கள், இந்த துப்பாக்கிச் சூடு முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய ஒன்று என்பதையும், முன்கூட்டியே முடிவு செய்த அடிப்படையில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது என்பதையும் உறுதி செய்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திவரும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் உண்மையானவை. அவற்றால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மிக அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கூட அந்த ஆலை எடுக்கவில்லை. இந்த நிலையில் ஆலை விரிவாக்கத்திற்கான செய்திகள் வந்ததால்தான் மக்கள் போராட்டக் களத்திற்கு வந்தார்கள். 100 நாட்கள் போராட்டம் அமைதியாகவும் அதே சமயம் வீரியமாகவும் நடைபெற்றது.

மே 23 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாசுக்கட்டுப்பாட்டு நிபந்தனைகளை அமலாக்காத ஆலைக்கு மின் இணைப்பை, குடிநீர் இணைப்பை துண்டிப்பதாக’ அறிவிக்கப்பட்டது. இதனை எப்போது அவர்கள் முடிவு செய்தார்கள் என்பது முக்கியமானது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை முதன்மை சுற்றுச் சூழல் பொறியாளர் மே 18 – 19 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வில்தான் ஆலையின் சுற்றுச் சூழல் முறைகேடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிக்கை விபரங்கள் வாரியத் தலைவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி நஜிமுதீனுக்கும், துறை அமைச்சரான கருப்பணனுக்கும் கட்டாயம் அனுப்பப்பட்டிருக்கும். ஒரு நாள் தாமதம் என்று எடுத்துக்கொண்டாலும், மக்களின் போராட்டத்தை அறிந்தவர்களுக்கு குறைந்தது மே 20 ஆம் தேதியே இந்த முடிவுகளை தெரிந்து கொண்டிருக்க முடியும்.

தூத்துக்குடியில் 100 நாட்களாக போராட்டம் நடந்துவந்த நிலையில், உள்துறை, உளவுத்துறைகள் கண்மூடி இருந்திருப்பார்களா? மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக போராடும் மக்கள் அறிவித்திருந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஆலையை மூட உத்தரவிட்டிருந்தால் மக்கள் பெருமளவு கூடியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தூத்துக்குடி மக்களின் போராட்டம் மற்றும் சுற்றுச் சூழல் வாரியத்தின் ஆய்வு முடிவு நிச்சயம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் நடந்திருக்காது என்று நம்பச் சொல்வது சிறுபிள்ளைத்தனம்.

போராட்டத்தில் உள்ள மக்களுக்கு உண்மையை தெரிவித்து, போராட்டக் கோரிக்கைகளுக்கான வெற்றியாக ஆலையை மூடி, சுமூகமான முடிவை எட்டுவதுதான் – ஜனநாயகச் சூழலை விரும்பும் எவரும் செய்ய முடிந்த செயல். போராடும் மக்களோடு பேசி, 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலோ அல்லது அதற்கு முன்பாகவே ஊர்க்கூட்டங்களிலோ அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கள ஆய்வு விபரங்களை தெரிவித்திருக்க முடியும்.
மாறாக, அரசு எதற்குத் திட்டமிட்டது என்ற கேள்விதான் சுற்றிச் சுற்றி வருகிறது. இப்போது மாவட்ட ஆட்சியர் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனை முன்கூட்டியே தெரிவிக்க மறுத்தது ஏன்?

99 நாட்களும் போராடி, கடைசி நாளில் 9 கி.மீ., தூரமும் எந்த வன்முறையும் இல்லாமல் நடந்து சென்ற மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி கொலைவெறித்தாண்டவம் ஆடியது ஏன்?
துப்பாக்கிச் சூடு நடந்தே ஆக வேண்டும் என சதித் திட்டம் தீட்டியது யார்?
துப்பாக்கிச் சூடு போன்ற முடிவுகளை தன்னிச்சையாக மேற்கொள்ளும் அமைப்பல்ல காவல்துறை. ஒரு தொலைக்காட்சியில் இதுபற்றி வெளியான ரகசிய வீடியோவில், ‘மாஜிஸ்திரேட் நிலையில் உள்ள அதிகாரி உத்தரவின் பேரில்தான்’ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டை சீருடை அணியாத காவலர்கள், அதுவும் உளவுத்துறையினர் செய்துள்ளனர்.அப்பாவிகளோடு, போராட்டத்தில் வீரியமாக முன்நின்றவர்களையும் தேடித் தேடிச் சுட்டுக் கொன்றுள்ளது போலீஸ் படை.

துப்பாக்கிச் சூட்டின் போது பின்பற்ற வேண்டிய எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் பெருமளவு உயிர்ப் பலி வாங்கும் நோக்கத்துடன் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டது ஏன்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் என்று மக்கள் நம்பிய அரசு, கார்ப்பரேட் கூலிப்படையாக செயல்பட்டிருக்கிறது. இனியும் தமிழக மண்ணில் ஒரு கார்ப்பரேட் நிறுவன எதிர்ப்பு போராட்டம் எழக்கூடாது என்ற வன்மத்துடன் திட்டமிட்டே இந்தப் படுகொலை நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் தூத்துக்குடியில் கேட்ட துப்பாக்கிச் சத்தம் தமிழ்நாடு முழுவதும் கேட்கத் துவங்கிவிடும். தமிழகம் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணம் இது.

Leave a Reply

You must be logged in to post a comment.