எல்லாத் துறையையும் போலவே விளையாட்டிலும் இளையவர்கள் வருவதும்,முதியவர்கள் விடைபெற்றுச் செல்வதும் இயல்பான ஒன்றாகும். ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டி பல வீரர்களுக்கு கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக அமையவுள்ளது.அவர்கள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெறுவார்கள்.அத்தகைய வீரர்களில் சில முக்கியமானவர்கள்:-

ரபேல் மார்க்கோஸ் (மெக்ஸிகோ)
22 ஆண்டுகளுக்கு முன்பு தனது கால்பந்து வாழ்க்கையைத்துவங்கிய ரபேல் மார்க்கோஸ் கடந்த ஏப்ரல் மாதம் கிளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 5 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று தனது கூட்டாளியான அன்டோனியோ கர்பஹால், ஜெர்மனி வீரர் லோதர் மாத்யூஸ் ஆகியோரின் சாதனையைச் சமன் செய்தார்.1997ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற இவரால் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இடம் கிடைக்கவில்லை. 2002 ஆம் ஆண்டு அணித்தலைவராக போட்டிகளில் பங்கேற்றார். தொடர்ந்து 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அணித்தலைவராக நீடித்தார். 2002, 2006, 2010, 2014 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ஆந்த்ரே இனியெஸ்டா (ஸ்பெயின்)
ஸ்பெயின் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். 2010 ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணிக்காக இவர் அடித்த கோல் கால்பந்து வரலாற்றில் இடம்பிடித்த கோலாக விளங்குகிறது. களத்தில் மின்னல் வேகத்தில் செயல்படும் திறமைகொண்ட இனியெஸ்டா 2006 ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு முன்பாக லா லிகா (ஸ்பானீஸ் லீக்) தொடரில் அரங்கேறினார்.அதன்பின் ஸ்பெயின் அணியின் முதுகெலும்பாக இனியெஸ்டா விளங்கினார்.இருபது ஆண்டுகளுக்குப் பின் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய இனியெஸ்டா ரஷ்ய உலகக் கோப்பையுடன் விடைபெறவுள்ளார்.2006, 2010, 2014 ஆகிய 3 உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 10ஆட்டங்களில் இனியெஸ்டா களமிறங்கியுள்ளார்.எனினும் ஓய்வுக்கு பின் சீனாவில் நடைபெறும் லீக் தொடரில் விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிம் காஹில்(ஆஸ்திரேலியா)
உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தவர் என சிறப்பு பெருமைக்கு சொந்தக்காரரான காஹில் 3 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 5 கோல்கள் அடித்துள்ளார்.கடந்த முறை பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி அடித்த கோல் இவரது திறமைக்குச் சான்றாகும்.

ஹாவியர் மஷேரானோ(அர்ஜென்டினா)
இவரது திறமையை சந்தேகித்தவர்களுக்கு கடந்த உலகக் கோப்பை போட்டியில் சரியான பதிலடி கொடுத்தவர்.கடந்த முறை இறுதிப் போட்டிவரை முன்னேறியதற்கு ஹாவியர் மஷேரானோவுக்கு அர்ஜென்டினா அணி மிகவும் கடமைப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இவரைப்பற்றி கால்பந்து ஜாம்பவான் மாரடோனா குறிப்பிடும்போது ’ஹாவியரும் மீதம் 10 பேரும்’ என்று கூறினார்.பிரேசிலில் இழந்தது ரஷ்யாவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஹாவியர் மஷேரானோ. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணியின் ஆர்யன் ராப்பன் அடித்த சர்ச்சையான கோலை தடுத்த ஹாவியரின் அசத்தலான ஆட்டம் அந்த தொடரின் சிறந்த ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.எனினும் அது கோலாக நடுவர் தவறாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10-வது உலகக் கோப்பை:                                                                                                                                                         10-வது உலகக் கோப்பை போட்டிகள் மேற்கு ஜெர்மனியில் நடைபெற்றது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.சான்டியாகோ மைதானத்தில் சிலி அணிக்கு எதிரான ப்ளே ஆப் போட்டியில் சோவியத் யூனியன் அணி விளையாட மறுத்துவிட்டது. பல பேரின் குறுதி ஓடிய சான்டியாகோ மைதானத்தில் நாங்கள் விளையாடத் தயாரில்லை என சோவித் யூனியன் அறிவித்துவிட்டதால் உலகக் கால்பந்து வரலாற்றில் எதிரணி இல்லாமல் போட்டி நடைபெற்ற்று,சிலி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் சிவப்பு அட்டையைப் பெற்றவர் என்ற பெயர் கார்லோஸ் காஸெலிக் என்ற வீரருக்குக் கிடைத்தது.மைதானத்தின் மூலையில் நடப்படும் கொடிகள் காணாமல் போனதால் இறுதிப் போட்டி தாமதமாகத் துவங்கியது. இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியும் நெதர்லாந்தும் மோதின. தொடரில் 14 கோல்கள் அடித்து ஒரே ஒரு கோல் மட்டும் பெற்றிருந்த நெதர்லாந்து அணியே வெல்லும் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால் கைஸர் பெக்கன்போவரின் மேற்கு ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி கோப்பைத் தட்டிச் சென்றுவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.