தூத்துக்குடி: சற்று முன் என் பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடியிலிருந்து பேசினார். அடிக்கடி பேசுகிறவர் அல்ல அவர். அபூர்வமாகப் பேசுபவர்.

அவர் சொன்ன செய்தி மிக முக்கியமானது. அதை அப்படியே சுருக்கிச் சொல்லுகிறேன்:

” இன்றைய தினமணியில் இன்பராஜ் என்பவரின் கட்டுரை வந்திருக்கு. ஸ்டெர்லைட் போராட்டத்தில் முக்கியமாக இருப்பது கடலோர மக்கள் என்கிற கருத்தை அதுல திணிச்சுருக்காங்க. இது ரொம்ப ஆபத்தான ஒரு வேலை. மனம் பொறுக்க இயலாமல் உங்களைப் போன்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்படி மதரீதியாக இந்தப் பிரச்சினையைக் கொண்டு போறது ரொம்பக் கவலை அளிக்கிறது. இந்தப் போராட்டத்தில் கிறிஸ்தவ மீனவர்கள் மட்டுமல்ல.. மிகப் பெரிய அளவில் இந்து நாடார்கள் இருக்காங்க. தேவேந்திரகுல வேளாளர்கள் இருக்காங்க. தேவர்கள் இருக்காங்க. முஸ்லிம்கள் இருக்காங்க. எல்லோரும் இந்த ஆலையினால் பாதிக்கப்படுறாங்க. எல்லோரும் சேர்ந்துதான் இப்ப இந்தப் போராட்டம் நடந்துட்டு இருக்கு. சொல்லப்போனால் இந்தப் போராட்டம் இங்கே சாதி, மதங்களை எல்லாம் கடந்த ஒரு சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு. இப்படியான ஒரு பிரச்சாரத்தை நாம அனுமதிக்கக் கூடாது. நான் இப்போது எங்கும் வெளியில் செல்லும் நிலையில் என் உடல் நிலை இல்லை. உங்களைப் போன்றவர்கள் இதைப் பேச வேண்டும்”

பேராசிரியர் சிவசுப்பிரமணியன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர். மூத்த தமிழறிஞர். தூத்துக்குடி வரலாற்றிற்கு ஒரு கருவூலமாக நம்மிடையே வாழ்பவர். அவர் பேசி முடித்த போது என் கண்கள் கலங்கின.

-Marx Anthonisamy

Leave A Reply