சென்னை:
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மே 22 அன்று நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23-ஆம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்ததோடு, ஆலையின் முதல் அலகை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, மார்ச் 27-ஆம் தேதி முதல் ஆலை செயல்படாமல் தான் இருந்து வருகிறது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம் என்றும் மூடப்பட்ட முதல் அலகின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.