சென்னை:
தூத்துக்குடியில் 13 உயிர்களைப் பலி வாங்கிய, தமிழக அதிமுக அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் நடைப்பெற்ற இந்த போராட்டத்தால் தமிழ்நாடு – புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

சென்னையில் 95 சதவிகிதம் கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி என மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெறும் தூத்துக்குடியில் தொடர்ந்து 4-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள், ஆட்டோக்களும் இயங்கவில்லை. சில இடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டமில்லாமல் அவை வெறிச்சோடின. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அவை தமிழக – கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் உட்பட பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து சென்னை எழும்பூரில் திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்று கைதாகினர். சைதாப்பேட்டையில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் அனைத்துக் கட்சித்தலைவர்களும் பங்கேற்ற சாலைமறியல் நடைப்பெற்றது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக தோழமைக் கட்சியினர், மதுராந்தகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். முன்னதாக திருமணம் ஒன்றை ஸ்டாலின் நடத்திவைத்த நிலையில், மணவாழ்க்கையில் இணைந்த கையோடு, அந்த புதுமணத்தம்பதியும் மறியலில் கலந்து கொண்டது.

திருநெல்வேலியில் நடைப்பெற்ற மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கைதாகினர்.முழு அடைப்பு சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாலிபர்கள் கைது
தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியலில்
ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பிரவீண்குமார் உள்பட 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மாநிலச் செயலாளர் எஸ்.பாலா வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.