புதுதில்லி:
நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று, சனிக்கிழமையுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாடு முழுவதும் அவரது ஆட்சிக்கு எதிராக, கடும் அதிருப்தி அலை வீசுவதாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் பெரிய மாநிலங்கள் அனைத்திலுமே மோடி அரசுக்கு எதிரான அலை வீசுவதாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
மோடி அரசின் நான்காண்டு செயல்பாடுகள் குறித்து, ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகராஷ்ட்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பொதுமக்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு மே மாதம் இருந்த மோடி அரசு மீதான அதிருப்தி அனைத்து மாநிலங்களிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில்தான் எதிர்ப்பு அலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது தெரியவந்துள்ளது.
வட மாநிலங்களைப் பொறுத்தவரை, உத்தரப்பிரதேசத்தில் 44 சதவிகிதம் பேரும், மத்தியப் பிரதேசத்தில் 46 சதவிகிதம் பேரும், ராஜஸ்தானில் 37 சதவிகிதம் பேரும் மோடி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். பீகாரில் மட்டுமே 29 சதவிகிதம் என்ற குறைந்த விகிதத்தில் எதிர்ப்பு பதிவாகி உள்ளது.

ஆனால், பாஜக-வுக்கும், பிரதமர் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் தென் மாநிலங்கள், இப்போதும் மோடிக்கு எதிராக இருப்பதாகவும்- இன்னும் சொன்னால் மோடி- பாஜக எதிர்ப்பு, தென்மாநிலங்களில் முன்பைவிட அதிகமாகி இருப்பதாகவும், மேலும் அந்த எதிர்ப்பு வலுவானதாக மாறியிருப்பதாகவும் லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
தெலுங்கானாவில் 63 சதவிகிதம் பேரும், கேரளத்தில் 64 சதவிகிதம் பேரும், ஆந்திராவில் 68 சதவிகிதம் பேரும் மோடி அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று கூறும் கருத்துக் கணிப்பானது, இந்த அதிருப்தி தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 75 சதவிகிதம் அளவிற்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 2017-ஆம் ஆண்டு மே மாதம் மோடி அரசு மீதான அதிருப்தி 55 சதவிகிதமாக இருந்தது. தற்போது சுமார் 20 சதவிகிதம் அதிகரித்து 75 சதவிகிதமாகி உள்ளது. இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக தமிழகத்தில்தான் மோடி அரசுக்கு எதிரான அலை ஒரு சுனாமி போல ஓங்கி அடிப்பதும் தெரிய வந்துள்ளது. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே மோடிக்கான எதிர்ப்பு அலை சற்று குறைவாக 45 சதவிகிதமாக இருக்கிறது.

மற்றபடி ஒடிசா, மேற்குவங்கம், குஜராத், மகாராஷ்ட்டிர மாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை வலுவாகிக் கொண்டே வருவதை கருத்துக் கணிப்பு படம் பிடித்துள்ளது. ஒடிசா-வில் கடந்த ஆண்டு 14 சதகிவிதமாக இருந்த மோடி அரசு மீதான அதிருப்தி, தற்போது 28 சதவிகிதமாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு 24 சதவிகிதமாக இருந்த மோடி அரசுக்கு எதிரான அலை தற்போது 45 சதவிகிதமாகி உள்ளது.மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 20 சதவிகிதமாக இருந்த எதிர்ப்பு நடப்பு மே மாதம் வரையிலான காலத்தில் 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் 28 சதவிகிதம் என்ற எதிர்ப்பலை, தற்போது 47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.