சென்னை,
தூத்துக்குடியில் அமைதியான வழியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராக 100 நாட்களுக்கும் மேலாக அமைதியாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இளம்பெண் உள்ளிட்ட 12 பேரை பரிதாபமாக, உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்க்க வந்த உறவினர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவர் கெல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினரின் துப்பாக்கி சூடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் இன்று திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.