சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், கலவரத்திற்கு
பின்னர், தமிழ்நாடு அரசால் முடக்கப்பட்ட இணையதள சேவையை மீண்டும் வழங்க வேண்டும், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விடுமுறைகால சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு வாதங்களை கேட்ட, நீதிபதிகள், இயல்புநிலை திரும்பிவிட்டதாக அரசு தெரிவிப்பது உண்மையானால், இணையதள சேவை முடக்கத்தை ஏன் நீக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: