திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் கடந்த சில நாட்களாக மலைபோல் தேங்கி தூர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் குப்பைக்கூளம் சேறும், சகதியுமாக மோசமான நிலையில் தொற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் குப்பை பிரச்சனை என்பது தீராத பெரும் தலைவலியாகத் தொடர்ந்து வருகிறது. நகராட்சியாக இருந்த காலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 100, 200 டன் அளவுக்கு குப்பைகள் உற்பத்தியானது. அப்போதே குப்பைகளை அப்புறப்படுத்துவது பெரும் பிரச்சனையாக இருந்தது. கடந்த 2000ஆம் ஆண்டு காலத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை கோயில் வழி எனும் இடத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் அமைத்தனர். ஆனால் மக்கும் குப்பைகளைத் தரம் பிரித்துத் தர வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்ற முடியாத நிலையில் அந்த தொழிற்சாலையை பாதியிலேயே கைவிட்டுவிட்டு ஹைதராபாத் நிறுவனம் சென்றுவிட்டது.

இதன் பிறகும் அடுத்தடுத்து வந்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிப்புச் செய்தனர். குறிப்பாக திருப்பூருக்கு அருகாமையில் இருக்கும் இடுவாய் ஊராட்சியில், நகராட்சிக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை காங்கிரீட் களம் அமைத்து நிரந்தர தீர்வு காணப் போவதாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அறிவிப்பதும், பிறகு துரும்பைக்கூட அசைக்காமல் விட்டுவிடுவதுமாக நிலைமை பழையபடியே தொடர்ந்து வந்தது. இதற்கிடையே பழைய திருப்பூர் நகராட்சியானது, சுற்றிலும் இருந்த பகுதிகளையும் உள்ளடக்கி மாநகராட்சியாக விரிவுபடுத்தப்பட்டது. பரப்பளவும், மக்கள் தொகையும் அதிகரித்ததுடன், தொழிற்சாலைகளும் அதிக அளவில் இருக்கும் நிலையில் திருப்பூரில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளும் அதிகரித்தது. மாநகரில் தற்போது தொழிற்சாலை கழிவுகளையும் சேர்த்தால் ஏறத்தாழ 1000 டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகிறது.

ஆனால் தொலைநோக்கு பார்வையுடன் திடக்கழிவு மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்படாத நிலையில் குப்பை பிரச்சனை மலை போல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை நகரிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் இருந்த பாறைக்குழிகளில் இந்த குப்பைகளைக் கொட்டி பிரச்சனையை சமாளித்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம். அப்போதும் கூட முதலிபாளையம் ஊராட்சி, பொங்குபாளையம் ஊராட்சி என சுற்று வட்டார ஊராட்சிகளில் உள்ள பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பும் ஏற்பட்டு வந்ததால் நீீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டது.

இந்நிலையில் முதலிபாளையம் பாறைக்குழி நிரம்பிய நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் நகரில், ஆங்காங்கே உள்ள குழிகளில், குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.ஒருவழியாக வெள்ளியங்காடு அருகே கல்லாங்காட்டில் பாறைக்குழி ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றி கடந்த 20 நாட்களாக அங்கே குப்பை கொட்டி வருகின்றனர்.  இதுகுறித்து, திருப்பூர் மாநகர் நல அலுவலர் பூபதி கூறுகையில், கல்லாங்காட்டில் கடந்த, 20 நாட்களாக குப்பை கொட்டப்படுகிறது. பகல், இரவு நேரங்களில் குப்பை கொட்ட சில நடைமுறை சிக்கல்கள் இருந்தது. அதற்கு தீர்வு செய்யப்பட்டு கொட்டப்படுகிறது. கொட்டப்படும் குப்பைகளை மூன்று ஜே.சி.பி., மூலம் உள்ளே தள்ளிவிடப்பட்டு, மட்டம் செய்த பின் கொட்ட அனுமதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக குப்பை கொட்ட மாநகராட்சி வாகனங்கள் செல்கிறது. இதனால், குப்பையுடன் வாகனங்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. இரண்டு வாரத்துக்குள் இந்த பாறைக்குழியும் நிரம்பி விடும்.

மேலும், இரண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கொட்டுவதற்கான பணிகளும் நடக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். என்னதான் பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டாலும் இவையெல்லாம் தற்காலிக ஏற்பாடுகளாகவே உள்ளன. நிரந்தரத் தீர்வு என்பது இல்லை. இது குறித்து மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் ஏற்கெனவே ஒரு முறை செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் உள்ள நகரங்களில் எல்லாம் திடக்கழிவு மேலாண்மை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்பது இல்லை. இது பற்றி வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைக்கு வல்லுநர்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் திடக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆனால், இதெல்லாம் தற்போது நடைமுறைக்கு வருவதற்கான எந்த வெளிச்சமும் தென்படவில்லை. அதிகாரிகள் ஒருபுறம் திட்டமிடல் பற்றி பேசினாலும், எப்போதும் போல் குப்பைகள் தேங்கிய மாநகரமாகவே திருப்பூர் காட்சியளிக்கிறது. அதுவும் தற்போது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை , இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில் குப்பைகள் சேறும், சகதியுமாக உள்ளது. துர்நாற்றத்துடன், பூச்சிகள், கிருமிகள் பெருகி தொற்று நோய் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே இந்த பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது சமாளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைவிட நிரந்தரத் தீர்வு காண திட்டமிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்போது முன்னெச்சரிக்கை நோய்த் தடுப்பு, சுகாதார நடவடிக்கைகளையும் முடுக்கிவிட வேண்டும் என்பதே திருப்பூர் மாநகர மக்கள் எதிர்பார்ப்பு.

– வே.தூயவன்

Leave a Reply

You must be logged in to post a comment.