தீக்கதிர்

இந்துத்துவா வெறிக் கும்பலிடமிருந்து இஸ்லாமியரைக் காத்த சீக்கிய அதிகாரி…!

நைனிடலால்:
இந்துத்துவா வெறிக் கூட்டத்திடமிருந்து, இஸ்லாமிய இளைஞர் ஒருவரை, சீக்கிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி காப்பாற்றியிருப்பது, உணர்ச்சிகரமான நிகழ்வாக மாறியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் உள்ள கோயிலுக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த தனது காதலி விடுத்த அழைப்பின்பேரில், அந்த இஸ்லாமிய இளைஞர் கோயிலுக்கு வந்து, காதலிக்காக காத்திருந்துள்ளார். பின்னர் தனது காதலி வந்ததும் அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, காதலர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்ட இந்துத்துவா மதவெறிக்கும்பல், அந்த இளைஞர் இஸ்லாமியர் என்பதை அறிந்து தாக்கத் துவங்கியுள்ளது. இதனைக் கவனித்துவிட்ட- அங்கு கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ககன்தீப் சிங், வேகமாக விரைந்து வந்த அந்த இஸ்லாமிய இளைஞரை, தாக்குதலிலிருந்து தடுத்து, வெறிக்கும்பலிடமிருந்து பத்திரமாக மீட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்வு வீடியோ பதிவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சீக்கிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, ஒரு இஸ்லாமிய இளைஞரை, இந்துத்துவ வெறிக்கும்பலிடமிருந்து பாதுகாத்த நிகழ்வும் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங்கிற்கு பலர் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.