ஈரோடு,
பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியில் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகரின் ஆதரவுடன் அனுமதியின்றி மணல் திருடப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா, புங்கார்ஊராட்சியில் அமைந்துள்ளது பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதி. இப்பகுதியில் மோயாறு மற்றும் சில கிளைகாட்டாறுகள் இணைகிறது. இங்கு, பவானிசாகர் அணையை சுத்தப்படுத்தவும், ஆழப்படுத்தவும் தீர்மானித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்டு ஆளுங்கட்சியான அதிமுகவின் முக்கிய பிரமுகரின் ஆதரவுடன் மணல், நைஸ் மணல், செம்மண் போன்றவற்றை அனுமதியின்றி இரவு, பகலாக ஆயிரக்கணக்கான லோடு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதற்கு முழு உடைந்தையாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியினர் மற்றும் செங்கல் சூலை முதலாளிகள், விவசாயிகள் என்ற போர்வையில் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளில் 500 முதல் 600 லோடு மணல், செம்மண், நைஸ் மணல் போன்றவைகளை அனுமதியில்லாமல் எடுத்து வருகிறது. மேலும், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10 ஏக்கர்வீதம், 20 அடி ஆழம் வரை மணல் எடுத்துள்ளனர். ஒரு லோடு மணல் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும், நைஸ் மணல் ஒரு லோடு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையும், செம்மண் ஒரு லோடு 5 முதல் 8 ஆயிரம் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளே அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து அமோக விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், இந்த மணல் கடத்தலில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அதிமுகவின் முக்கியபிரமுகர் ஒருவரே நேரடியாக தலையிடு செய்கிறார். இதனால் இந்த சட்டவிரோத மணல் கடத்தலை அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது என வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: