===நவகவி===

ஆலைப் புகையுடன் ஜோடி சேர்ந்தது
போலீஸ் துப்பாக்கிப் புகைமண்டலம்.
சாலையில் சிந்திய ரத்தம் தெறித்திட
உச்சிக் கதிரவனும் செம்பவளம்.

புற்று நோய் தரும் ஆலையினால் எம்
உடலில் பல இடம் புண் காயம் .
மிச்சம் மீதி இடத்தை நிரப்பவா
குண்டு துளைத்த ரண காயம்?

எழில்மயம் ஆக்கும் இந்த தேசத்தை
தொழில்மயம் என்றீர் ஆண்டைகளே!
பிணமயம் எங்கும் பிணமயம்; ஆனால்
பணமய மாய் உங்கள் பெட்டிகளே!

உங்கள் ஆலை புகை போக் கிகளாய்
ஆனது எங்கள் மூச்சுக்குழல் .
உங்கள் ஆலைக் கழிவுகள் தேங்கும்
கிடங்குக ளாடா எங்கள் உடல் ?

பெற்ற வயிறுகள் பெறாத வயிறுகள்
ஆகிப் போயின கருச்சிதைவால்.
வற்றிய கிணறுகள் கழிவு நீர் ஊறும்
“வரம்” பெறும் உங்கள்” கருணையினால் “!

தாய் வயிற்றில் சிசு சிதைந்தால் உங்கள்
ஆலை வேலைக்கு ஆள் ஏது?
தாமிரத்தாலே ரோபாட் செய்தாலும்
மனிதரின்றி அது இயங்காது !

ஆலை தந்த புற்றுநோய் அல்ல
ஆண்டை தந்த புண் புற்றுநோய் !
“வேலை தந்த புண்ணிய வான்” எம
ஓலை தந்தான் கொடை வள்ளலாய்!

முற்றிய புற்றுநோயடா இந்த
முதலாளித்துவக் கொடும் புற்றுநோய்!
பற்றிய புற்றுமேல் பட்டுத் துணி தான்
ஆட்சியும் சட்டமும் என அறிவாய்.

எதிலும் காசு ; ஈனக் காசு ;
நெற்றிக் காசிலும் கமிஷனடா!
அதனால் தானோ மனித உயிரையும்
காசாய் மதிக்கும் அமைச்சனடா!

உயிரின் விலை பார் பத்து லட்சமாம்
என்னே இவர்களின் வெகுமதி பார்!
மயிரை விலையாய் காசுபண்ணும் திரு
மலைச் சா மிக்கே வகுப்பெடுப்பார் !

சுற்றுச்சூழல் கெடுத்தவர்கள் பார்
சுற்றம் சூழ பரவசமாய் !
வெற்று வயிற்றுக்கு வெறுங்காற்றல்ல
விஷக் காற்றளித்தனர் இலவசமாய் !

ரத்தம் காயலாம் ரணமும் ஆறலாம்
சித்தமும் சீற்றமும் ஆறிடுமோ?
செத்த உயிர்களின் இறுதி மூச்சினை
தேடி எடுத்திட முடிந்திடுமோ?

முடியும் முடியும் தோழர்களே அவர்
மூச்சுகள் தொலைந்து போகவில்லை!
விடியும் படி வரும் புரட்சிப் புயலின்
விசையில் பார் அந்த மூச்சுகளை !

அழுகிற காலம் இதுவல்ல; இது
ஆத்திரம் கொள்கிற காலமடா!
விழுகிற காலம் விடை பெறட்டும்! இது
எழுகிற காலம் காலமடா!

Leave A Reply

%d bloggers like this: