ஈரோடு,
விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே இத்திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர் பேராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகளின் ஒரு பிரிவினர் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்கப்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர், இதுதொடர்பாக ஆட்சியரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தினர். பின்னர் ஆட்சியர் பிரபாகரிடம் மனு கொடுத்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.