கோவை,
கோவையில் மாநகராட்சி பள்ளியின் மைதானத்தை தனிநபர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஒண்டிபுதூரை அடுத்துள்ள சுங்கம் பகுதியிலுள்ள எஸ்.எம்.எஸ் லே அவுட்டில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள காலிமனையிடங்கள் லே அவுட்டாக பிரிக்கப்பட்டபோது, பொதுபயன்பாட்டிற்கு என 62 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடம் தற்போது மாநகராட்சி பள்ளியின் விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வருகிறது. மேலும், பள்ளியின் சார்பில் நடைபெறும் பொதுவிழாக்களுக்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் பொதுப்பயன்பாட்டிற்கான 62 சென்ட் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிக்கும் வகையில் பத்திரபதிவு செய்ய முயற்சித்து வருகின்றனர். அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பை கண்டித்து எஸ்எம்எஸ் லே அவுட் நலச்சங்கம் மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வியாழனன்று பள்ளி மைதானத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன் கூறுகையில், அரசுப் பள்ளியை மூடுவோம்
என்று ஒரு புறம் அரசு அச்சுறுத்துகிறது. மறுபுறம் மாநகராட்சி பள்ளி மைதானத்தை அதிகாரிகளின் துணையோடு தனிநபர்கள் அபகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது.

இதனை கண்டித்து இன்று காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டமாக கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இருப்பினும் அதற்கு முன்னதாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply