தூத்துக்குடியில் அமைதியாக போராடிய  துப்பாக்கிச்சூடு நடத்திய தொடர்ந்து அப்பகுதி மக்களை கைது செய்யும் அரசின் அராஜகத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் நாளை முழுஅடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சிபிஎம் அறைகூவல் விடுத்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தி, துப்பாக்கிசூடு மேற்கொண்டு தொடர்ந்து நரவேட்டையாடி வரும் தமிழக அரசின் ஜனநாயக விரோத போக்கைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆiயை நிரந்தரமாக மூடக்கோரியும் அனைத்து கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதித்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குப் பதிலாக, பன்னாட்டுக் குழுமமான வேதாந்தாவின் கைக்கூலிகளாக தமிழக ஆட்சியாளர்களும், காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் மாறியுள்ளனர். இந்தச் சூழலில் தூத்துக்குடி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அமைதியான முறையில்
போராட்டக்களத்தில் இறங்கினர். அவர்கள் மீது கடந்த 3 நாட்களாக பழிவாங்கும் வெறியோடு வீடு, வீடாகப் புகுந்து கடும் தாக்குதல்களை நடத்தி மாவட்டம் முழுவதும் பயங்கரவாத
நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. 13 உயிர்கள் பலி கொண்டு விட்ட அரசாங்கமும், காவல்துறையும் இன்னமும் ஓய்ந்திராமல் போராட்டக்காரர்களை தேடிப்பிடித்து அடக்குமுறைகளை ஏவிவிட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மீது பொய்
வழக்குகள் போடப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். மருத்துவமனையில் படுகாயமுற்று நூற்றுக் கணக்கானோர் உயிருக்கு போராடி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும் தூத்துக்குடிக்குச் சென்ற தலைவர்கள்
மீதும் பொய் வழக்கு போட்டு அரசாங்கம் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் வரலாறு காணாத இந்த அடக்குமுறைக்கு உறுதியான மக்கள் இயக்கமே வலுவான பதிலாக அமைந்திடும். தமிழக ஜனநாயக சக்திகள் அனைவரும் திரண்டு, போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி, அரசின் அடக்குமுறைகளைக் தடுத்து
நிறுத்திட முன்வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும், துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, 13 பேரை பலி வாங்கிய எடப்பாடி அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் கூறி அனைத்துக்கட்சி சார்பில் நாளை நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்தில் அனைத்துப்பகுதி மக்களும், ஜனநாயக சக்திகளும்,
வணிகர்களும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு நல்கி வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

%d bloggers like this: