ஈரோடு,
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மரண ஓலங்கள் எழுந்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகக்கோரி வியாழனன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்துநிலையத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் தலைமை வகித்தார். திராவிடக் கழகத்தின் நிர்வாகி த.சண்முகம், காங்்கிரஸ் நகர நிர்வாகி ரவி, முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி சிந்திக் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர்.விஜயராகவன், எஸ். முத்துசாமி, எஸ்.சுப்பிரமணியன், பி.பழனிசாமி, சி.பரமசிவம், ஜி.பழனிசாமி, நகர செயலாளர் சுந்தரராஜன், ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (ஜாக்டோ ஜியோ) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கினைப்பாளர் யு.கே.சிவஞானம் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.வெங்கிடு, மாவட்டத் தலைவர் ஜே.பாஸ்கர்பாபு, மாவட்ட பொருளாளர் உஷாராணி உள்ளிட்ட திரளானோர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஈரோடு புதிய பேருந்து நிறுத்தம் அருகில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநகர ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, கண்மணி உட்பட பலர் பங்கேற்று கைதாகினர். மேலும், ஈரோடு பழையபாளையம் பகுதியில் நீரோடை அமைப்பின் தலைவர் நிலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் இல.கலைமணி தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி ஒன்றிய குழு சார்பில் ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜாத்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலத்தில் சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் அஸ்தம்பட்டி விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் சங்கத்தின் மாநில துணை செயலாளர் முருகேசன் துணைத் தலைவர் செல்லப்பன், கோபிநாத், கிருஷ்ணன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகப்பெருமாள், மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் சி.கே.ராமச்சந்திரன்உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி; 
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தமிழக மக்கள் மேடை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டததிற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை, ராமன்குட்டி. இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை;
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு மாநகர காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் மைதானத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, பலத்த கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து வியாழனன்று இளைஞர்கள் சிலர் தடையினை மீறி வ.உ.சி.மைதானத்திற்குள் நுழைந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர்.

இதேபோல், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது மற்றும் தூத்துக்குடி சூப்பாக்கி சூட்டை கண்டித்து வடகோவை பகுதியில் திமுக மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம், பொள்ளாச்சி நகர பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் செயலாளர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் ச.பிரபு, ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாசானிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆட்டோக்கள் ஓடாது:
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து வெள்ளியன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்திலுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படாது என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.இதேபோல், துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் வியாழனன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், வெள்ளியன்றும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: