காவல் துறை சகோதரனே!
அது உயிரற்ற உடல்தான்!
அதற்கு வலியோ, சொரணையோ இருக்காதுதான்!
ஆனாலும் ஒற்றைக்காலைப் பிடித்துக் கொண்டு அந்தத் தார்ச்சாலையில், தர தரவென்று இழுக்கிறாயே!

தொலைக் காட்சியில் கண்டவர்களின் உள்ளங்கள் துடித்துப் போயின!

அந்தச் சகோதரனைப் பெற்றவர்கள், இந்தக் காட்சியைப் பார்க்கும்போது எவ்வளவு வயிறு எரிந்திருப்பார்கள்?

அவரது உடன்பிறந்தவர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ பார்க்கும்போது அவர்களது உள்ளங்கள் எப்படியெல்லாம் பதறியிருக்கும்!

உயிர் பிரிந்தவுடன், உடலைத் தூக்கிக் கங்கையில் வீசிவிட்டுப் போகும் கூட்டமல்ல இது!

உயிரற்ற உடலே என்றாலும், அதைக் கொண்டு போய் மண்ணில் புதைக்கும் வரை அலுங்காமல் பார்த்துக் கொள்ளும் கூட்டம்!

பாடையில் கொண்டு போகும்போதும், உடல் நலுங்காமல் கொண்டு சென்று புதைக்கும் கூட்டம்!

அந்த உடல் இருக்கும் இடத்தில், உன் உடன் பிறந்தவனையோ, உன் நண்பனையோ நினைவில் நிறுத்திப் பார்த்து இருப்பாயானால் உன் உடலும், உள்ளமும் துடித்திருக்கும்! பதைத்திருக்கும்!

அவ்வப்போது, உங்கள் மனசாட்சியைக் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள், நண்பர்களே!

Leave A Reply

%d bloggers like this: