===ஏ.லாசர்===
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்களின் தமிழ் மாநில 9ஆவது மாநாடு திருவாரூரில் மே 28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முன்னணி தலைவர்கள் 600 பேர் இதில் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு தமிழக அரசியல் நிலைமை- அதில் கிராமப்புற உழைப்பாளிகள் வாழ்நிலை அதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, இதற்கான மாற்று நிலைபாடு குறித்து விவாதித்து முடிவெடுக்க உள்ளார்கள்.
மே 30 அன்று பல்லாயிரக்கணக்கான கிராமப்புற கூலித்தொழிலாளிகள், சிறு-குறு விவசாயிகள்

இவர்களின் நேச சக்திகள் திரண்டு பேரணியில் பங்கேற்கிறார்கள், மாலை பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். இந்த பொதுக்கூட்டத்தில் திரிபுர மாநிலத்தில் 20 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து சிறப்பான நிர்வாகம், நேர்மையான நிர்வாகம், ஊழல் இல்லா நிர்வாகத்தை மக்களுக்கு தந்து, பொதுவாழ்க்கையில், சொந்த வாழ்க்கையில், தூய்மையின் அடையாளமாக திகழ்ந்து, தேசமே பாராட்டிய மாமனிதர். முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேச இருக்கிறார்.

அவருடன் அகில இந்திய, மாநிலத் தலைவர்களும் பேசுகிறார்கள். கிராமப்புற கூலித் தொழிலாளர்களுக்கு என இந்தியாவில் சுதந்திர நாட்டில் கொண்டுவரப்பட்ட ஒரே ஒரு சட்டம் தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம். இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து ஆட்சியில் இருக்கும் வரை சட்டத்தை சட்டப்படியான நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தி, நாடே போற்றும் விதத்தில் ஆட்சி நடத்திக் காட்டியவர். எதிர்முகாமைச் சார்ந்தவர்களே பாராட்டும் விதத்தில் செயல்பட்டவர்.

அவர் பேசும் இடம் திருவாரூர் தேரடி வீதி. இந்த தேரோடும் வீதியில் உழைப்பாளிகள் என்று சொல்லப்படும் கிராமப்புறக் கூலிகள். நகர்ப்புறக் கூலிகள், ஏழை விவசாயிகள், இடதுசாரி மனோபாவம் கொண்ட நகர்ப்புற உழைப்பாளிகள், குறிப்பாக மாநிலம் முழுவதும் இருந்து வரும் கூலித்தொழிலாளர்களாகிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைப்பாளிகள் அணிதிரள்கிறார்கள்.

இந்த உழைப்பாளிகளில் குறிப்பாக தலித் தொழிலாளிகள் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் இந்த வீதிகளில் நடமாட முடியாது. இழுக்கப்படும் தேரின் வடத்தை தொடுவதற்கோ, தேரில் அமர்ந்து வரும் தியாகராஜர் சாமியை தரிசிப்பதற்கோ, ஏன் அதில் அமர்ந்து வரும் அர்ச்சகரான அய்யரை கூட இவன் பார்க்க முடியாது. அப்படி ஏதாவது ஒரு மூலையில் நின்று கடவுளை தரிசித்தாலோ, கடவுள் அமர்ந்துவரும் தேரின் வடத்தை தொட்டுப் பார்த்துவிட்டால் அதை உயர்சாதியினர் பார்த்துவிட்டாலோ, அடுத்த நிமிடம் இவன் கடவுளுக்கு முன்பாக காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்படுவான் அல்லது பார்த்த கண் பறிக்கப்படும். இல்லையேல் அவன் கொல்லப்படுவான்.
ஏன் என்றால் அவன் செய்தது அவ்வளவு பெரிய குற்றம், பாவம், யாராலும் மன்னிக்க முடியாத நீசச் செயல். 1லட்சம் கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டவன் பிரதமராகலாம், முதலமைச்சராகலாம், ஏன் நாட்டையே ஆளலாம். ஆனால் தேர் வடத்தைத் தொட்டவன் கொல்லப்படுவான். இதுதான் சனாதனவாதிகளின் அன்றைய சமூக நியாயம்.

தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையான தண்டனையை அவனோ அவனது உறவினரோ வேறு யாருமே ஏன் என்று கேட்டதில்லை, கேட்கவும் கூடாது. அனைத்துவித மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான தண்டனையை அவன் அனுபவிக்க வேண்டும். அல்லது அவன் சாக வேண்டும் என்ற கொடுமைகள் நடந்த மண்ணில் தலித்துகளின் விடுதலைக்காகவும் அந்த கூலி தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்த செங்கொடி இயக்கம். பண்ணை அடிமைத்தனத்திற்கு பாடை கட்டிய பாட்டாளி வர்க்க இயக்கம், உயிருக்கே உத்திரவாதமில்லாதிருந்த உழைப்பாளிகளை திரட்டி, இன்று உரிமைக்கு குரல் கொடுக்க வைத்த இயக்கத்தின் மாநில மாநாடு திருவாரூர் வீதியில் நடக்கிறது.

வரலாற்றில் பெரும் கொடுமைகளை எந்த திருவாரூர் வீதிகளில் சந்தித்தார்களோ அந்தக் கூலி தொழிலாளிகளின், கொத்தடிமைகளின் குறிப்பாக தலித் மக்களின் இன்றைய வாரிசுகள், இன்று தியாகராயர் வலம் வந்த அதே ராஜ வீதியில், தியாகராயர் வரும் தேர் நிற்கின்ற அதே இடத்தில் மேடை போட்டு அதில் ஏறி அமர்ந்து வீரமுழக்கம் இடுகிறான்.

இன்றைய கூலித் தொழிலாளிகளாகிய நானும் என் சக தொழிலாளிகளும், எங்களை தலைநிமிரவைத்து, ராஜவீதியில் ராஜநடைபோட வைத்த செங்கொடியுடன் புதிய வரலாறு படைக்க கூடியிருக்கிறோம் என்று பிரகடனப்படுத்தக் கூடுகிறார்கள்.
அன்று சனாதனவாதிகள் சட்டமே இல்லாமல் சாட்டையடியும், சாணிப்பாலும் கொடுத்து சாகடித்தார்கள். நாங்கள் அந்த சதியை முறியடித்து சரித்திரம் படைத்தோம்.
சுதந்திர இந்தியாவில் எங்களுக்கு என ஒரே ஒரு சட்டம்தான் கொண்டுவரப்பட்டது. அதில் எங்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவையான வேலையையும் அதற்கான கூலியையும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தையும் உத்திரவாதம் தந்தது. அந்தச் சட்டத்தையே சாகடிக்க முயற்சிக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

மத்தியில் உள்ள மோடியும் மாநிலத்தில் உள்ள எடப்பாடியும் அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள். ஆனால் சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை முடமாக்கினால் சட்டத்தை சீரழித்தால் ஜனங்கள் பார்த்துக்கொண்டு இருப்பார்களா? கூலித்தொழிலாளர்களுக்கு என சட்டத்தை கொண்டுவர 50 வருடமாக சுதந்திர இந்தியாவில் போராடி ரத்தம் சிந்திய கிராமப்புற உழைப்பாளிகள், அந்த சட்டத்தை அழிக்கவோ, சீரழிக்கவோ யார் முயற்சித்தாலும் அதனை உயிரையும் கொடுத்து தடுப்பார்கள் என்பதை, மோடியும், எடப்பாடியும் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் உழைப்பாளிகள் புரியவைப்பார்கள்.
மத்திய கிராமப்புற வேலை உறுதி (100 நாள் வேலை) சட்டத்தை ரத்து செய்ய முயற்சித்து, தோல்விகண்ட மோடி அரசு இப்போது திட்டநிதியை குறைத்தும், அதை காலத்தில் மாநிலங்களுக்கு அனுப்பாமல் பணிகளை செய்யவிடாமல் முடக்கப் பார்க்கிறது.

ரேகா திட்ட நிதியில் கைவைக்க சதி
மாநில எடப்பாடி அரசு, சட்டத்துக்கு விரோதமாக, திட்ட நிதியை எடுத்து, ஆளுங்கட்சிக்காரர்கள் அதிகாரிகள் எப்படி மற்ற திட்ட நிதியில் கொள்ளையடிக்கிறார்களோ அதேபோல் ரேகா திட்டநிதியிலும் கைவைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
2018 ஜனவரியில் கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் ஒரு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுயநிதி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழ்நாட்டில் 1000 விற்பனை மையம் கட்டுவது ஒரு மையத்திற்கு 60லட்சம் ரூபாயில் கட்டிடம் கட்ட 1000 மையத்திற்கு 600 கோடி ரூபாயை நூறு நாள் வேலைத்திட்டத்தில் இருந்து எடுத்து அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளமாக கட்டுமானப் பொருட்கள் வாங்க பயன்படுத்துவது என்று மாநில அரசு அறிவித்து, அதை கீழே உத்தரவாக அனுப்பியது.

இது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியையும் தோண்டியது போல் உள்ளது.
அதிமுக அரசு எந்த பணமாக இருந்தாலும் அதில் கைவைக்காவிட்டால் அவர்களுக்கு தூக்கமே வராது. ஏன் என்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததே அதற்காகத்தான். இவர்கள் 2011ல் ஆட்சிக்கு மீண்டும் வந்ததில் இருந்து இந்த நிதியில் கை வைக்க என்னென்ன வழி இருக்கிறது என்று யோசித்து வந்தனர். அதேபோல் அதிகாரிகள், சொரி சிரங்கு வந்தவர் எப்படா சொரியலாம் என்று காத்திருந்தது போல் அவர்களும் காத்து இருந்தனர். அதற்கான வாய்ப்பாக சட்டமன்றத்தில் இடதுசாரி எம்எல்ஏக்கள் இல்லாத இந்த காலத்தை பயன்படுத்திக் கொண்டு ரூ.600 கோடியை எடுக்க 110 விதியின் கீழ் சட்டத்தை வளைக்க சட்டத்தை அழிக்க வழிவகுத்துள்ளார்கள்.
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உழைப்பாளிகளின் உதிரத்தை குடித்தவர்கள் இப்போது உயிரையும் குடிக்க திட்டமிடுகிறார்கள்.

அப்பாவி விலங்குகளை விரட்டிப்பிடித்து வேட்டையாடி உண்ணும், சிங்கமும், புலியும் பட்டினியிலும் பசியாலும் துடித்து நடமாட முடியாமல் கிடக்கும் ஆடுகளை, மாடுகளை, மான்களை படுத்த இடத்திலே வேட்டையாடும் சிங்கம், புலி போல் இப்போது மத்திய அரசும், மாநில அரசும் தொழிலாளிகளுக்கான சட்டத்தையே முடக்கி சீரழித்துவிட்டு, தொழிலாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரேகா திட்ட நிதியை கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கிறார்கள். தமிழக அரசு 110விதியின் கீழ் அந்தப் பணியை முடக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த கொடியவர்களிடம் இருந்து உழைப்பாளிகளாகிய நாம், நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல சதிகளை முறியடித்தவர்கள் நாம். செங்கொடி இயக்கமும் அதன்பின் திரண்ட உழைப்பாளிகளையும் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு தொழிலாளிகளையும் நாம் திரட்டிட வேண்டும்.

நவீன முதலாளித்துவ முறையில் உழைப்பாளிகளை, கிராமப்புற கூலி தொழிலாளிகளை, பழைய பண்ணை அடிமை முறைக்கு இன்றைய முதலாளிகளும், அவர்களின் நலன் பேணும் இன்றைய மாநில – மத்திய அரசுகளும் வரலாற்றை திருப்பப் பார்க்கிறார்கள். இதை நாம் முறியடித்தாக வேண்டும்.

தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் முடங்கிக் கிடக்கும் கூலித் தொழிலாளிகள் அரசின் சதிகள் பற்றி அறியாதிருக்கும் ஏழைகள், பேரூராட்சிப் பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை அமலாக்க வேண்டுமென்று கோருகிற லட்சோப லட்சம் தொழிலாளிகளை திருவாரூரில் திரட்டிடுவோம்.

நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையையும் சனாதனவாதிகளின் கொத்தடிமை சமூக அமைப்பையும் சரித்திரத்தில் சாகடித்தவர்கள் நாம்.

இன்றைய ஆட்சியாளர்களின் புதிய சதிகளை முறியடித்திட திருவாரூரில் திரளுவோம்… திட்டமிடுவோம்…

Leave a Reply

You must be logged in to post a comment.