ஈரோடு,
ஓடத்துறை குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இருதரப்பு விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டதால் கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆட்சியர் வெளியேறினார்.

கீழ்பவானி பாசன பகுதியில் நிலவி வந்த வறட்சியை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 15 நாட்கள் திறக்கப்பட்டதையடுத்து அணை மூடப்பட்டது. ஆனாலும் முழுமையாக தண்ணீரை நிறுத்தாமல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கீழ்பவானி மெயின் வாய்க்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிட்டிருந்தனர். இந்த தண்ணீரை பவானி அருகே உள்ள ஓடத்துறை குளத்திற்கு அவசரகால மதகுகளின் வழியாக திறந்துவிட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. இதற்கு கீழ்பவானி விவசாயிகள் மற்றும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததோடு அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் அதிகாரிகள் முறைகேடாக தண்ணீர் திறந்துவிட்டதாக குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் வியாழனன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஓடத்துறை குளத்திற்கு சட்டவிரோதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணைபோய் உள்ளதாக கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி பாசன விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்கு ஓடத்துறை குளம் பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம்சாட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இருதரப்பு விவசாயிகளிடையேயும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக ஈரோடு நகர காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

ஆனாலும் தொடர்ந்து இருதரப்புவிவசாயிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டிருந்தனர். இதற்கிடையே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள், ஓடத்துறை குளத்திற்கு சட்ட விரோதமாக தண்ணீர் திறக்கப்பட்ட அவசர கால மதகுகளின் சாவி கோபி அருகே ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறி ஆட்சியரிடம் சாவியை ஒப்படைக்க முயன்றனர். ஆனால் சாவியை பெற்றுக்கொள்ள மறுத்த ஆட்சியர் பிரபாகர், திடீரென கூட்ட அரங்கில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். ஆட்சியர் வெளியேறியதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் பிறதுறை அதிகாரிகளும் வெளியேறினர். இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் முடிந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.