புதுதில்லி:                                                                                                                                                                            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ளஅறிக்கை:
தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரின் உயிரைப் பறித்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை படுகாயமடைய செய்த காவல்துறையின் கொடிய தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களில் பலரும் தலையிலும், முகத்திலும் குண்டு பாய்ந்து ரத்தம் சிந்தி இருக்கிறார்கள் என்பது, தமிழக அரசின் காவல்துறையின் கொடூரத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் காற்று, நீர் மற்றும் நிலம் ஆகியவை விஷத் தன்மை வாய்ந்ததாக மாறியிருப்பது குறித்த மக்களின் கவலைகளையும், கோரிக்கைகளையும் மாநில அரசு நிர்வாகம் எந்தவிதத்திலும் மதிக்கவில்லை என்பதாலேயே போராட்டங்கள் எழுந்தன. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு வற்புறுத்துகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஈவிரக்கமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்று குவித்த கயவர்கள் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அரசு அறிவித்துள்ள விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தின் பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.