நாகர்கோவில்:
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை எடப்பாடி அரசைத் தவிர -பாஜகவைத் தவிர வேறு யாரேனும் ஆதரிக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பிய ஜி.ராமகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாநில அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன இயக்கங்கள் புதன்கிழமை நடைபெற்றன. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது கண்டன உரையாற்றினர். அப்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
தூத்துக்குடி நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை மாநில அமைச்சர் , தவிர்க்க முடியாதாது என்று நியாயப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியபிறகு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதன் மூலமோ, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலமோ  மாநில அரசு தப்பித்துக் கொள்ள முடியாது.

தொழிற்சாலைகள் மக்கள் நலனுக்காக வரவேண்டும். மக்களை கொல்வதற்காக அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் துவங்கியபோது அது நச்சு விஷவாயுவை கசிய விட்டது. ஸ்டெர்லைட் ஆலை துவங்கிய பிறகு தூத்துக்குடி நகரில்  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்டெர்லைட் ஆலைதான் புற்றுநோயை உருவாக்குகிறது.

அந்த ஆலையை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகிறபோது, அந்த ஆலையை விரிவாக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி கொடுக்க முன்வந்தன. அந்த ஆலையை விரிவாக்க கூடாது, மூட வேண்டும் என 18 கிராமங்களைச் சேர்ந்த  பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போராட்டம் மூன்று மாதங்களுக்கு முன்னால் நடைபெற்றது. அப்போது அரசு வாய்மூடி மௌனியாக இருந்தது. மக்களை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்கக்கூடாது. எரிவாயு குழாய் பாதிப்பு விவசாயத்தை விவசாயிகளை பாதிக்கிறது என போராட்டம் நடைபெற்றபோது மாநில அரசு அதற்கு தடைவிதித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்குவதற்காக, தொடர்ந்து மக்கள் போராடியதால் மத்திய அரசு அந்த திட்டத்தை ரத்து செய்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்னும் போது ஏன் மக்கள் போராட்டம் தடுக்கப்படுகிறது? ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? வேதாந்தா நிறுவன முதலாளி ஒரு பன்னாட்டு முதலாளி. அவரை பாஜக ஆதரிக்கிறது. மோடி ஆதரிக்கிறார். மத்திய பாஜக அரசின் கைப்பாவையான எடப்பாடி அரசு அந்த கம்பெனியை ஆதரிக்கிறது. மக்கள் நலனா, அல்லது முதலாளிகள் நலனா? மக்கள் நலனை பாதுகாப்பதற்கு பதிலாக முதலாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் இன்று காவல் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மக்கள் போராட்டம் நடத்துகிறபோது மாவட்ட ஆட்சியர், அலுவலகத்திற்கு செல்லவில்லை. மக்கள் பிரச்சினை தீர்த்து வைக்கும் அதிகாரம் , ஸ்டெர்லைட் ஆலையை நீடிக்க வேண்டுமா கூடாதா என்று மாநில அரசுக்கு பரிந்துரைக்கும்  அதிகாரம் என மாவட்ட ஆட்சியருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அந்த போராட்டத்தின் போது அலுவலகம் செல்லவில்லை. மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கவில்லை. எல்லையில் நடக்கும் சண்டையைப்போல் காக்கி உடையணியாதவர்கள் காவல்துறை வாகனத்தின் மீது நின்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இப்படி துப்பாக்கிச் சூடு நடத்த யார் அதிகாரம் கொடுத்தார்கள்? மாநில அரசு அறிவுறுத்தாமல் காவல் துறையினர் இப்படி முடியாது செயல்பட மாட்டார்கள்.

தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும், தூத்துக்குடியில் 12 உயிர்களை பறித்த மாநில  முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை எடப்பாடி அரசைத் தவிர பாஜகவைத் தவிர வேறு யாரேனும் ஆதரிக்கிறார்களா? ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எங்கள் போராட்டம் ஓயாது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், ஏ.வி.பெல்லார்மின், எம்.அண்ணாதுரை, கே.மாதவன், எஸ்.ஆர்.சேகர், கே.தங்கமோகன், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.உஷா பாசி, என்.ரெஜீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.