தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக்கோரி போராடிய மக்கள் மீது காவல்துறைநடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று ஈவு,இரக்கமற்ற முறையில் 11 பேரைக் கொன்று
குவித்த காவல்துறை புதனன்று மேலும் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்தது.புதனன்று தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் (22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கியதாகவும் நிலைமையை சமாளிக்கவே துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.இந்த சம்ப
வத்தில் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பத்து போலீசார் காயமடைந்துவிட்டதாக காவல்துறை கூறிக்கொண்டது.

போலீஸ் ராஜ்யம் தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக புதனன்று பேருந்துகள் இயங்கவில்லை நகரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. நகரின் ஒவ்வொரு வீதியிலும் காவல்துறையினர் லத்திக்கம்புகளுடன் பொதுமக்களை விரட்டி அடித்துக்கொண்டே இருந்தார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சில காவலர்கள் துப்பாக்கிகளுடன் வலம் வந்தனர்.

காவல்துறையினரின் அணிவகுப்பை மிரட்சியுடனும், அதிர்ச்சியுடனும் பார்த்த மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்வதை நேரடியாக காண முடிந்தது .
வீட்டு வாசல்களில் நிற்கும் பெண்கள் எங்கள் ஊரில் இதுபோன்றதொரு கொடுமையை நாங்கள் பார்த்ததில்லை; போராட்டத்திற்கு தொடர்பில்லாத பள்ளி மாணவர்கள் கூட காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை நினைக்கும்போது எங்கள் வீட்டு பிள்ளை பாதிக்கப்பட்டதாகவே நினைக்கிறோம் என்று நமது செய்தியாளரிடம் பேசிய பெண்கள் தங்களது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அனைத்துக்கட்சி தலைவர்கள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொடுங் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஐமாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன்,தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட காவல்துறை ஈவு, இரக்கமின்றி தாக்கியது என்றும் தலைவர்களிடம் புகார் கூறினர்.

வெறும் இடமாற்றம்                                                                                                                                                                  தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான ஆட்சியர், காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ள நிலையில், அவர்களை வெறுமனே இடமாற்றம் செய்துள்ளது எடப்பாடி அரசு. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி., மகேந்திரன் ,வடசென்னை போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்டேஷ் மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நாளை கடையடைப்பு: சிபிஎம் ஆதரவு
                தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆவேசமிக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மே 25 அன்று அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 24  மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முழு ஆதரவை தெரிவித்துள்ளார். 

Leave a Reply

You must be logged in to post a comment.