===அ.அன்வர் உசேன்===
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணியில் சென்ற நிராயுதபாணியான 12 பேரை காவல்துறையினர் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காவல் துறையினர் எப்படி துப்பாக்கிசூடு நடத்தினார்கள் என்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. தமிழக காவல்துறை ஈவுஇரக்கமற்ற கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டதா என எண்ணும் அளவிற்கு இந்த செய்திகள் உள்ளன.

தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொல்லப்பட்ட மக்கள் அனைவரும் மார்பு மீது குண்டு பாய்ந்து இறந்துள்ளனர். 17 வயது மாணவி வாயில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி இறப்பதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு காவல்துறையினரிடம் வாதிடுவது தெளிவாக தெரிகிறது. ஆனால் திடீரென குண்டு பாய்ந்து இறக்கிறார்.

இது எப்படி சாத்தியம்? எங்கிருந்து காவல்துறையினர் சுட்டனர்? எப்படி சுட்டனர்? இந்த கேள்விகளுக்கு சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் ஜனநாயக எண்ணம் கொண்டுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியும் அசாத்திய கோபமும் வரவழைக்கிறது.

மக்கள் போராட்டத்தில் ஸ்னைப்பர்களா?
இந்தியாவிலேயே முதல் முறையாக, போராடும் மக்கள் மீது ஸ்னைப்பர் (sniper) எனும் குறிபார்த்து சுடுபவர்களை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஸ்னைப்பராக இருபபவரின் கையில் தரப்படும் துப்பாக்கி மிகத் தூரத்திலிருந்து தனது இலக்கை மிகத் துல்லியமாக சுட முடியும். இந்த துப்பாக்கி மிகவும் விலை உயர்ந்தது; விசேடமாக தயாரிக்கப்படுகிறது; இதற்கு பயன்படுத்தும் குண்டுகளும் விசேடமாக வடிவமைக்கப்படுகின்றன.

சுடுபவர் சுமார் 2.5 கி.மி. முதல் 3 கி.மி. தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்கைத் துல்லியமாக சுட முடியும். இதற்காக டெலஸ்கோப் எனும் தொலைநோக்கு கருவி துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே எங்கிருந்து குண்டு பாய்கிறது என்பதும் சுடுபவர் எங்கு மறைந்து உள்ளார் என்பதும் எவருக்கும் தெரியாது. இத்தகைய முறையில்தான் தூத்துகுடி ஆட்சியர் அலுவகம் முன்பு மக்கள் சுடப்பட்டுள்ளனர். ஆனால், இங்கு மறைந்திருந்து அல்ல, பகிரங்கமாக… சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வாகனங்களிலேயே எப்படி துப்பாக்கி ஏந்தி சுட்டுக் கொண்டே உலா வருகிறார்களோ… அதுபோல படுகொலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

Snipe எனில் உள்ளான் குருவி என பொருள்படும். இந்தப் பறவையை வீழ்த்துவது அவ்வளவு எளிது அல்ல. இது வேகமாக இடம் மாறும் என்பது மட்டுமல்ல; எதிரிகளிடமிருந்து தன்னை எப்படி மறைத்து கொள்வது என்பதையும் நன்றாக அறிந்த பறவை. அதனாலேயே மறைந்திருந்து சுடுபவருக்கு ‘Sniper’ எனும் பெயர் சூட்டப்பட்டது. இப்படிச் சுடும் முறை முதல் முதலாக 1770களில் பிரிட்டஷ் ஏகாதிபத்தியத்தால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

எனினும் 20ம் நூற்றாண்டில் மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் நவீன துப்பாக்கிகள் அமெரிக்க இராணுவத்தால் இராக் போரில் பயன்படுத்தப்பட்டன. இதற்காகவே விசேட பயிற்சி ஸ்னைப்பர்களுக்கு அளிக்கப்பட்டது. சுமார் 2.5 முதல் 3.5 கி.மி. க்கு அப்பால் மறைந்திருந்து சுடும் அளவிற்கு இந்த துப்பாக்கிகள் வடிவமைக்கப்பட்டன. அதே அளவிற்கு பயிற்சியும் ஸ்னைப்பர்களுக்கு அளிக்கப்பட்டது. இராக் போரில் சில முக்கியமான நபர்களையும் இராணுவ தளபதிகளையும் ஸ்னைப்பர்கள் மூலம் அமெரிக்கா சுட்டுக் கொன்றது. பின்னர் இந்த முறையை உலகம் முழுவதும் பல நாடுகள் பயன்படுத்த ஆரம்பித்தன.

சமீபத்தில் இஸ்ரேலிய ஸ்னைப்பர்கள் பாலஸ்தீன மக்களை கொத்துக் கொத்தாக குறி வைத்து சுட்டுக் கொன்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்திய இராணுவம் ஸ்னைப்பர் பயிற்சியை தொடங்கியது. இராணுவம் அல்லாத பிரிவில் தேசிய பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த ஸ்னைப்பர் பயிற்சி அளித்தனர். ஆனால் இந்தியாவில் எங்கும் போராடும் அப்பாவி மக்களுக்கு எதிராக ஸ்னைப்பர்களை காவல்துறையினர் பயன்படுத்தும் கொடுமை அரங்கேறியதாக தகவல் இல்லை. இந்த கேடு கெட்ட இழிவுத்தனத்தை எடப்பாடி அரசங்கம்தான் தொடங்கி வைத்துள்ளது.

ஸ்னைப்பர்களின் கொலை பாதக செயல்!
தூத்துக்குடியில் காவல்துறையின் வாகனம் மீது ஏறி நின்று கொண்டு மூன்று ஸ்னைப்பர்கள் வெகு தூரத்திலிருந்து மக்கள் மீது சுடுவதை மிகத்தெளிவாக காட்சி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் போராட்டத்திற்கு தலைமை தாங்குபவரைச் கூட குறிபார்த்து சுட முடியும். அதுதான் நடந்துள்ளது. இந்த ஸ்னைப்பர்கள் காவல்துறை சீருடையில் இல்லை. எனவே இவர்கள் காவல்துறையினரா அல்லது காவல்துறையினரால் அமர்த்தப்பட்ட ஒப்பந்த கொலையாளிகளா எனும் கேள்வியும் எழுகிறது. உண்மை எதுவாக இருந்தாலும் தூத்துகுடி மரணங்கள் குறிப்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மரணங்கள் பச்சையான படுகொலைகள் என்பது மறுக்க முடியாது.

இந்த கொடூரமான படுகொலைகள் குறித்து சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட சில பதிவுகள்:

Ø “ஸ்னைப்பர்கள் சுட்டனர் என்பதை நம்ப முடியவில்லை. இது அடிமை அரசாங்கம் என நினைத்தேன். ஆனால் இது அடிமை மற்றும் காட்டு மிராண்டி அரசாங்கம் என்பதை உணர்ந்தேன்”

Ø “இவர்கள் பாதுகாப்பு படையினரா அல்லது கொலைகார ரவுடிகளா?’’

Ø “இது ஒரு திட்டமிட்ட படுகொலை’’

Ø “தமிழக காவல்துறை ஸ்னைப்பர்களை பயன்படுத்தியுள்ளதா! என்ன நடக்கிறது தமிழகத்தில்?’’

Ø “இது நடக்கும் நமது நாடு ஜனநாயக நாடுதானா? எங்கே நாம் செல்கிறோம்?’’

Ø “நிராயுதபாணியான மக்கள் மீது ஸ்னைப்பர்கள் மூலம் தமிழக அரசாங்கம் சுடுவது வெட்ககேடானது’’

Ø “காவல்துரையினர் கூறுவது போல தற்காப்புக்காகவோ அல்லது பொது சொத்துக்களை பாதுகாக்கவோ அல்ல இந்த துப்பாக்கி சூடு! இது பச்சையான படுபாதகமான கொலை வெறிச்செயல்”

Ø “தமிழக காவல்துறையினரா அல்லது இஸ்ரேல் இராணுவமா? “

Ø “இது என்ன ஹாலிவுட் திரைப்படமா அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையா? மக்கள் மீது இப்படி சுடுவது வேதனையானது”

-இப்படி ஏராளாமன பதிவுகள் தமிழக அரசாங்கமும் காவல்துறையும் எந்த அளவிற்கு கீழ்த்தரமாக செயல்பட்டுள்ளன என்பதை தோலுரித்து காட்டுகிறது. இந்த ஸ்னைபப்ர்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? முகவரி என்ன எனும் விவரங்கள் கூட சமூக ஊடகங்களில் உலா வருகின்றன.

ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு எழுப்பும் கேள்விகள்!
இந்த கேடு கெட்ட செயல்கள் சில முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன:
1. மாவட்ட ஆட்சியரும் வருவாய் அதிகாரிகளும் அங்கு இல்லாத பொழுது துப்பாக்கிச் சூடுக்கு அனுமதி அளித்தது யார்?

2. மக்கள் போராட்டங்களில் ஸ்னைப்பர்களை பயன்படுத்திட வழிகாட்டுதல் உள்ளதா?

3. ஸ்னைப்பர்களை பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் எந்த அதிகாரிக்கு உள்ளது?

4. தூத்துகுடியில் ஸ்னைப்பர்களை பயன்படுத்தும் முடிவை எடுத்தது யார்? அனுமதி அளித்தது யார்?

5. இது பச்சையான படுகொலை அல்லவா? அப்படியானால் ஸ்னைப்பர்கள் மீதும் அவர்களுக்கு அனுமதி அளித்தவர்கள் மீதும் கொலை குற்றம் சுமத்துவதுதனே சரியாக இருக்கும்?

6. எடப்பாடி அரசாங்கம் ஸ்னைப்பர்களுக்கு அனுமதி அளித்ததா?

7. மக்கள் போராட்டங்களில் ஸ்னைப்பர்களை தடை செய்ய அரசாங்கம் முன்வருமா?
இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஸ்னைப்பர்களும் அவர்களது காவல்துறை எஜமானர்களும் மற்றும் அரசியல் எஜமானர்களும் ஒன்றை நன்றாக புரிந்துகொள்வது நல்லது. எத்தனை ஸ்னைப்ர்களை பயன்படுத்தினாலும் நியாயமான மக்களின் போராட்டங்களை தடுக்க முடியாது. ஸ்னைப்பர்களிடமிருந்து தப்பிக்கும் மாற்று வழியை போராடும் மக்கள் விரைவில் கற்றுகொள்வார்கள்.

எனினும் தூத்துக்குடி படுகொலைகளுக்கு எடப்பாடி அரசாங்கமும் ஸ்னைப்பர்களுக்கு அனுமதி அளித்த அதிகாரிகளும் பதில் சொல்லியே தீரவேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.