புதுதில்லி:
வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறுமி ஒருவர், 12 துண்டாக வெட்டி வீசப்பட்ட கொடுமை தில்லியில் நடந்துள்ளது. ஈவிரக்கமற்ற முறையிலான இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 2 பேரில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தில்லியில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சோனி குமாரியை, கர்கெட்டாவை சேர்ந்த மன்ஜித் சிங் அழைத்து வந்து உள்ளார். பின்னர் ஒரு இடத்தில் வீட்டு வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். 13 வயதில் அழைத்து வரப்பட்ட சோனி குமாரி, மன்ஜித் சிங் சேர்த்து விட்ட இடத்தில், 6 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளத்தில், கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுவேலை செய்து வந்துள்ளார். அதேநேரம், சோனி குமாரியை தனது கொத்தடிமை போல வைத்துக் கொண்டு, அவரது சம்பளத்தை மன்ஜித் சிங்கே மிரட்டி அபகரித்து வந்துள்ளார்.அண்மையில், சொந்த ஊருக்கே போக விரும்புவதாகவும், தன்னிடம் பறித்துக் கொண்ட பணத்தை உடனடியாக தருமாறும் சோனி குமாரி கேட்டுள்ளார். ஆனால் பணத்தைத் தர முடியாது என்று மன்ஜித் சிங் மறுத்துள்ளார். சிறுமி தொடர்ந்து பணத்தைக் கேட்டு போராடவே, ஆத்திரமடைந்த மன்ஜித் சிங், சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். பின்னர் கொலை செய்தது தெரியக் கூடாது என்பதற்காக உடலைத் துண்டு துண்டாய் வெட்டி பிளாஸ்டிக் பேகில் கட்டி, சாக்கடையில் வீசியுள்ளார். இந்த படுகொலைக்கு அவரது நண்பர்களும் உடந்தையாக இருதுள்ளனர்.

கடந்த மே 4-ஆம் தேதி சிறுமியின் உடலை மீட்ட தில்லி மியான்வாலி நகர் போலீசார், தொடர் விசாரணைக்குப் பிறகு, மே 17-ஆம் தேதி 3 குற்றவாளிகளில் ஒருவரான மன்ஜித் சிங்கை வாடகை விடுதி ஒன்றில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.வறுமைக்காக வீட்டுவேலையில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி, கொத்தடிமையாக்கப்பட்டு, இறுதியில் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சோனி குமாரி வேலை செய்து வந்த குடும்பத்தினரிடம் விசாரணை செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு குழந்தை தொழிலாளி என்ற குற்றம் நிரூபணமானால் குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.