பெட்ரோல் டீசல் விலை இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்னையில் பெட்ரோல் ரூ.80 என்பது மட்டுமல்ல, டீசல் ஒரு லிட்டர் ரூ.72 ஆகியுள்ளது. இதனை சிறுகச்சிறுக,சில்லரைப் பைசாக்களாக நம் தலையில் ஏற்றிவைத்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, பேரல் 80 டாலராக இருக்கிறது. இதைவிடவும் சுமார் 2 மடங்கு விலை அதிகமாக இருந்தபோதும் ஏற்படாத உச்சபட்ச உயர்வு, இப்போது ஏன் ஏற்பட்டது? பெட்ரோலிய நிறுவனங்களின் லாப வெறி ஒரு காரணம் என்றால், அவர்களே சில சமயம் விலையைக் குறைத்தாலும், கலால் வரி போட்டு நேர் செய்த மோடி அரசு மற்றொரு காரணம். பெட்ரோல்டீசல் மீதான கலால் வரி மட்டும் 126 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இவ்வாறு மத்திய அரசு ஆண்டுக்கு ரூபாய். 2 லட்சம் கோடியை மக்களிடமிருந்து மறைமுகமாக சுரண்டி எடுக்கிறது.

பெட்ரோலிய நிறுவனத்திற்கு நாட்டின் கதவுகளை உடைத்து வழிவிட்ட மத்திய பாஜக அரசு:

பெட்ரோலிய நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வந்தனர். இதற்கே பல அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதனை எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத மோடி தலைமையிலான பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்குமாறு மாற்றம் செய்தனர்.

அது மட்டுமா இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிக்கும் உரிமையை ரிலையன்ஸ், ஷேல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. அந்த நிறுவனங்கள் எண்ணெய் துளையிட, சுத்திகரிக்க அனுமதிக்கப்பட்டபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள் அதாவது 2,032.58 ரூபாய் தான். ஆனால் தற்போது அந்நிறுவனங்கள் ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை லாபம் பெற மோடி அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்க ஒருபேரலுக்கு 15 அமெரிக்க டாலர்களை இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிக் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வின் மூலம் இந்தியாவில் நடுத்தர மற்றும் வறுமையில் வாழும் ஏழை மக்களிடமிருந்து மறைமுக வரிபோட்டுக்கொள்ளையடிக்கும் இதே மோடி அரசுதான்பெரும் பணக்காரர்கள், கார்ப்ரேட்டுகள்வாங்கிய ரூபாய் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களைதள்ளுபடியும் செய்தது.

மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை:

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் டீசல் மீதான மத்திய சுங்கவரி 380 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியன்று டீசலின் மீதான வரி விலக்கானது ரூ.3.56 ஆகும். பெட்ரோல் மீது லிட்டருக்கு 9.48 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் இந்த விலை 11 முறை பாஜக ஆட்சிக்காலத்தில் திருத்தியமைக்கப்பட்டது. பிறகு பெட்ரோலிய நிறுவனத்திற்கு விசுவாசத்தைக் காண்பிக்கும் வகையில் டீசல் விலையில் 3.56 ரூபாயிலிருந்து, டீசலின் மீதான வரி விலக்கு லிட்டருக்கு 17.33 ரூபாயாக உயர்ந்து, 3 ஆண்டுகளில் 380% அதிகரித்துள்ளது. பெட்ரோல் விஷயத்தில், அது லிட்டருக்கு 9.48 ரூபாயிலிருந்து 21.48 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த வரி விலக்கு யார் தலை மீது ஏற்றப்படுகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

வாட் வரி ஏற்றும் சுமை:

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சுமத்திய வாட் வரியால் வருவாய் பெற்றுள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி விலக்கு மூலம் மத்திய அரசின் வருவாய் 2013-14 முதல் 2015-16 வரை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது 2013-14-ம் ஆண்டில் 77,982 கோடி ரூபாயிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி 2015-16ல் ரூ 178,591 கோடியாக வருவாயை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான வாட் வரி / விற்பனை வரி வசூல் மாநிலங்களில் சற்றே அதிகரித்தது. 2013-14 ஆம் ஆண்டில் 1,29,045 கோடி ரூபாயிலிருந்து, 2015-16ல் 1,42,848 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் டீசல் ஆகியவற்றினால் 4 மாநிலங்கள் மட்டும் 10,000 கோடிக்கு மேல் வாட் மூலம் பணம் வசூலிக்கின்றன.

அனைத்து மாநிலங்களை விடவும் மஹாராஷ்டிரா பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வருவாய் மூலம் அதிகபட்ச லாபத்தைச் சம்பாதிக்கின்றது. 2013-14இல் மகாராஷ்டிரா தொடர்ந்து 19,000 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது. 2013-14ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் (மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு) மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் மூலம் 10,000 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளன. இந்த 10,000 கோடிக்கு மேல் சம்பாரித்த லாபத்தை யாருக்காகச் செலவு செய்தாது இந்த மத்திய, மாநில அரசுகள்?

பெட்ரோல், டீசல்… ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?

பெட்ரோலியப் பொருட்களின் தேவை, 5.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். டீசல் என்பது லாரி, ஆட்டோ போன்ற போக்குவரத்து வாகனங்களிகள் பயன்படுத்தப்படும் ஏன் என்றால் பெட்ரோலை விட டீசல் குறைவு ஓரளவு வருமானத்தைச் சேமிக்க முடியும் என்பதாக இருந்து. ஆனால் இன்று பெட்ரோலில் விலைக்கு சமமாக டீசலின் விலை உயர்வும் இருந்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையோடு இணைந்த பெட்ரோலையும், டீசலையும் ஏன் ஜிஎஸ்டி க்குள் கொண்டுவரவில்லை என்ற கோரிக்கை நாடுமுழுவதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. பெட்ரோல் டீசல் என்பது அரசுக்குக் கிடைத்த பொன்முட்டை இடும் வாத்து போலத்தான். அதை முழுவதுமாக விட்டுவிட அரசிற்கு மனமில்லை. ஒரே நாடு ஒரே வரி என்று தம்பட்டம் அடித்த மத்திய அரசு பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்கமுடியாது என்று கூறிவிட்டனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவது என்பது லாபத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி கொண்டுவந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் படி அதிகபட்ச வரியாக 28 சதவிகிதம் விதித்தாலும் மக்களுக்கு தற்போது கிடைக்கும் விலையை விடப் பன்மடங்கு விலை குறைவாக கிடைக்கும். ஆனால் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் சுரண்ட முடியாது. மக்களைச் சுரண்டவே மோடி அரசு நாடு முழுவதும் ஓரே வரி என்று அரித்து விட்டு பெட்ரோல் டீசல்லை மட்டும் அதிலிருந்து பிரித்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டை பெருத்தவரை பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மது விற்பனை இவற்றின் மூலம் தான் ஒட்டுமொத்த வருவாயில் பாதிக்கு மேல் கிடைக்கிறது. அதாவது பெட்ரோல் மீது, மத்திய, மாநில அரசுகள், 55.5 சதவீத வரியையும், டீசல் மீது, 47.3 சதவீத வரியையும் விதித்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 79.446 க்கும், டீசல் 72.53 விற்கப்படுகிறது. இதுவே ஜிஎஸ்டி கொண்டுவந்தால் அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல், டீசல் விலை பாதிக்கு பாதியாகக் குறைந்துவிடும்” மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 138 சதவிகிதம் வரை வரி வசூலித்து வருகிறார்கள். இது மக்களின் மீது தொடுக்கப்படும் மறைமுக வன்முறை.

மேலும் வரியை குறைக்கமறுப்பதாலும், உள்நாட்டு உற்பத்தியை ஏற்படுத்தாமல் உற்பத்தி வரியைக் கூட்டுவதால் பெரும் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு மட்டுமே லாபமே தவிர ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு இல்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் வளச்சியியை பார்க்கும் போது ஏழை எளிய / நடுத்தர மக்கள் ஒருபோதும் உயர்ந்து விடக்கூடாது, அவர்கள் வாழ்க்கையில் அரசங்கத்தால் பயன் பெறக் கூடாது, என்ற முன்னால் / இந்நாள் அரசுகளின் புதியதாராளமயக் கொள்கையின் அடிப்படையில் தான் இந்த பெட்ரோலிய விலைவாசி உயர்வுகள். விடுதலை போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக வரிக்கட்ட மறுத்து போராட்டத்தின் மூலமே ஆங்கில அரசை அதிரவைத்தோம். ஆனால் தற்போதைய சுதந்திர இந்தியாவில் மோடி அரசு வரி மீது வரி விதித்தே மக்களை நிலைகுலையச் செய்து வருகிறது. மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல லட்சங்கோடிகளை சலுகைகளாக வாரி வழங்கி சேவகம் செய்து வருகிறது.

இரா.பிரேம் குமார்

Leave a Reply

You must be logged in to post a comment.