புதுதில்லி:
நாடாளுமன்ற மக்களவையில், பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை, 282-இல் இருந்து 272 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் இன்னும் ஓரிடம் குறைந்தால் கூட அந்த கட்சி, தனிப்பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இடைத்தேர்தல்களில் கிடைத்த தோல்வி மற்றும் எம்.பி.யாக இருந்தவர்களை மாநில முதல்வர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆக்கியது உள்ளிட்ட காரணங்களால் அந்த கட்சிக்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு வதோதரா (குஜராத்) ஷாதோல் (மத்திய பிரதேசம்), லக்கிம்பூர் (அசாம்) ஆகிய 3 தொகுதிகளை மட்டுமே பாஜக தக்க வைத்துக் கொண்டது.

ஆனால், 6 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாதி கட்யிடமும், பீட் (மத்தியப் பிரதேசம்), குர்தாஸ்பூர் (பஞ்சாப்), ஆல்வார், அஜ்மீர் (ராஜஸ்தான்) ஆகிய தொகுதிகளில் காங்கிரசிடமும் பாஜக தோல்வியை தழுவியது. இந்த 6 இடங்கள் தவிர, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது ஊழல் புகார் கூறியதற்காக பாஜக எம்.பி.யான கீர்த்தி ஆசாத்தை, பாஜக-வே சஸ்பெண்டு செய்தது. பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவும் தொடர்ந்து மோடி – அமித்ஷா தலைமையை எதிர்த்து வருகின்றார்.

இவற்றுடன் கர்நாடகத்தில் எம்எல்ஏ தேர்தலில் வென்றதைத் தொடர்ந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், மக்களவையில் பாஜக-வின் பலம் 272 ஆக குறைந்துள்ளது.இதனால் பாஜக ஆட்சிக்கு ஆபத்தில்லை என்றாலும், இன்னும் ஒரு இடம் குறைந்தால் தனிப்பெரும்பான்மையை அந்த கட்சி இழக்கும்.மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நான்கு எம்.பி. தொகுதிகளுக்கு மே 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெறுகிறது. இதில் ஏதாவது வெற்றி கிடைத்தால் பாஜக-வின் பலம் அதிகரிக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.