===ஆர்.பத்ரி===
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊரே திரண்டு ஊட்டிக்கு வந்து விட்டதைப் போல ஒரு தோற்றம். நகரமெங்கும் மனிதர்கள் கூட்டம். ஊர்ந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள். வண்ண மலர்களால் நிறைந்திருக்கும் பூங்காங்கள். விளக்குகளால் ஒளிரும் இரவு பஜார் சிறப்பு கடைகள். அலங்கரிக்கப்பட்ட படகுகளில் ஏரி சவாரி. தொட்டபெட்டா உச்சியில் வீசும் குளிர் காற்று என மலைகளின் ராணி ரம்மியமாய் இருக்கிறாள்.

தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் பயணிகள் குவிந்து வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்காவில் 122 வது மலர்கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் துவங்கியுள்ளது.

இந்த கோடை விழாவின் உற்சாகத்தில் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கட்சியின் சார்பில் சந்திப்போமே; அத்துடன் ஒரு வெகுஜன நிதி திரட்டும் இயக்கத்தையும் நடத்திடலாமே என களத்தில் இறங்கினோம். மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த தோழர்களை வைத்து ஒரு குழுவிற்கு ஐந்து பேர் வீதம் என மொத்தம் 17 குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் குழுத் தலைவர்களாக செயல்பட்டனர்.

உதகை பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா, திரைப்பட படப்பிடிப்பு புல்வெளி என சுற்றுலா தலங்களுக்கும், உதகை மார்க்கெட், பஜார் தெரு, பேருந்து நிலையம் என மக்கள் கூடும் முக்கிய இடங்களுக்கும் கட்சியின் குழுக்கள் சென்றன. வெகுஜன வசூலுக்கு செல்லும் அனைவரும் கட்சியின் பெயர் மற்றும் சின்னங்கள் பொறித்த தொப்பிகள், அடையாள அட்டைகள் அணிந்து கொண்டனர். தோழர்கள் தங்கள் கைகளில் ஒரு உண்டியல், மக்களிடம் விநியோகிக்க துண்டறிக்கைகள், கோடை விழா தீக்கதிர் சிறப்பிதழ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு குழுவிலும் நிதி வசூலில் தாங்கள் குழுவே முதலிடம் பெற வேண்டும் என்ற உற்சாகமும் இருந்தது. காலை 11 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிப்பது என முடிவாகி கிளம்பிய தோழர்கள் மாலையில் பெரும் உற்சாகங்களோடும், நிறைவான அனுபவங்களோடும் கட்சி அலுவலகத்திற்கு திரும்பினர்.

உதகை பூங்கா வாசலில் நமது குழுவை எதிர்கொண்ட ஒரு கேரள பெண்மணி “ ஈ சிவப்பின கண்டால் தராதிருக்கான் பட்டோ” ( இந்த சிவப்பை பார்த்தால் நிதி அளிக்காமல் கடந்து போக முடியுமா) என சொல்லிவிட்டு மனமுவந்து நிதி அளித்து விட்டு சென்றிருக்கிறார்.
உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அருகில் நமது குழுவை வேகமாக கடந்து சென்ற ஒருவர் திடீரென தனது காரை நிறுத்தி விட்டு அவராகவே வந்து நிதியை அளித்து விட்டு. “ நான் கட்சி உறுப்பினர் இல்ல சார். எனக்கு சொந்த ஊர் சிவகங்கை. ஆனால் நான் கொடைக்கானலில் சில காலம் வசித்தபோது எனக்கு பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் இந்த கொள்கைகளை எனக்கு அறிமுகப் படுத்தியதில் இருந்து எனக்கு கம்யூனிஸ்டுகள் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு தொடர்கிறது சார். அதான் பார்த்தவுடன் இறங்கி வந்துட்டேன்” எனச் சொல்லியிருக்கிறார்.

பைக்காரா என்னுமிடத்தில் நமது குழுவைப் பார்த்த திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் ரூ.500 நன்கொடை அளித்து விட்டு நமது தோழர்களின் உணர்வுப் பூர்வமான முயற்சியை வியந்து பாராட்டியிருக்கிறார்.
ஒரு சுற்றுலா தலத்தில் நமது தோழர்களை பார்த்து நிதி அளித்த கேரள கண்ணூர் தோழர்கள் மற்றொரு இடத்தில் இருந்த குழுவை பார்த்து விட்டு, நான் அங்கு நமது தோழர்களை பார்த்து நிதி அளித்தேன்; ஆனாலும் இங்கு உங்கள் குழுவிற்கும் அளிக்க விரும்புகிறேன் என விருப்பமாக நிதி அளித்திருக்கிறார்.

இப்படியாக பல உற்சாக அனுபவங்களை பகிர்ந்து கொண்டே தங்கள் உண்டியலில் கொண்டு நிதி எவ்வளவு என எண்ணி முடித்தனர். முதன் முறையாக மேற்கொண்ட இம்முயற்சியின் மூலம் தோழர்கள் சேகரித்த தொகை ரூ. 61,120 ஆக இருந்தது. நாம் எடுத்த இத்தகைய முயற்சிக்கு மக்கள் உணர்வுப் பூர்வமாக அளித்த ஆதரவை உணர்ந்த தோழர்கள் அடுத்த முயற்சியில் ஒரே நாளில் ஒரு லட்சம் ரூபாயைக் கடக்க முடியும் என்ற தங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டனர். வசூலில் கிடைத்த நிதியை விடவும், அனைத்து தரப்பு மக்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பாக இவ்வியக்கம் அமைந்ததே என்ற பெருமிதத்தோடு தோழர்கள் விடை பெற்றனர்.

ஒருபக்கம் கோடிகள், லட்சம் கோடிகள் என முதலாளித்துவக் கட்சிகள் பணத்தில் வாழ்ந்து, பணத்திலேயே மூழ்குகின்றன.

ஆனால், உழைப்பாளி மக்களின் உன்னத தோழனாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான், உதிரச் சிவப்புக் கொடியை உயர்த்திப்பிடித்து, உண்டியில் ஏந்தி, வீடு வீடாக, வீரவீரமாக மக்களும் நிதி திரட்டுகின்றன.

இதுவே எங்கள் பாரம்பரியம்! இதுவே அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கான வரம்! இதுவே எங்கள் சிவப்பின் உண்மை!

Leave a Reply

You must be logged in to post a comment.