பொள்ளாச்சி,
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை கேட்டு மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட 6 ஆவது மாநாடுஞாயிறன்று பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டிட வளாகம் பச்சார்பாளையம் தங்கவேல், கோமங்கலம் தோழர் பாலு நினைவரங்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மஞ்சை மகாலிங்கம் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செல்வராஜ் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் சி.துரைசாமி மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்புரையாற்றினார். இதனையடுத்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.திருமலைசாமி முன்வைத்த அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது.

இம்மாநாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மனு அளித்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் கிராமத்தில் தலித் அருந்ததியர் சமூக பெண்களுக்கு தாட்கோ வங்கிகடன் மூலமாக வாங்கிய விவசாய நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல், இடையூறு செய்து வரும் சாதிய ஆதிக்க சக்தியினர் மற்றும் அவர்களுக்கு துணை நிற்கும் அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு :
இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவை மாவட்டத் தலைவராக ஏ.துரைசாமி, துணைத் தலைவராக என்.வி.தாமோதரன், சி.பெருமாள், செயலாளராக ஆர்.செல்வராஜ், துணைச் செயலாளராக கே.மகாலிங்கம், ரவி, மாரியப்பன், பொருளாளராக பி.திருமலைசாமி உள்ளிட்ட 17 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, வி.தொ.ச. முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கேசவமணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.சந்திரசேகர் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி பேசினர். முடிவில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.