நாமக்கல்,
நாமக்கல் அருகே லாரி திருடியதாக கூறப்படும் நபரை லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அந்நபர் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமெண்ட் பாரங்கள் ஏற்றி செல்ல 500க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. இங்குள்ள லாரிகள் நிறுத்தத்திலிருந்து அடிக்கடி திருட்டு போனதையடுத்து, அனைத்து லாரிகளுக்கும் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டது.இந்நிலையில் வெள்ளியன்று இரவு கவுண்டனூர் பகுதியினை சேர்ந்த சின்னதம்பி என்பவரின் லாரி திருட்டு போனது. இதையடுத்து ஜி.பி.ஆர்.எஸ் கருவி உதவியுடன் தேடியபொழுது குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவில் லாரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லாரியினை மீட்க முயலுகையில், லாரியின் உள்ளே வீ.மேட்டூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து அவரையும் அழைத்து கொண்டு லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்பின் அங்கிருந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் லாரியை முருகேசன் தான் திருடியதாக கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த குமாரபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: