ஈரோடு,
சத்தியமங்கலம் தாலுகா நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் ரூ.55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நகராட்சியின் அனைத்து வீதிகளிலும் குழிதோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நகராட்சியின் கழிவுநீரை பவானி ஆற்றங்கரையோரத்திற்கு கொண்டு சென்று, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து பவானி ஆற்றில் கலக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். மேலும், கூத்தனூர், ஆர்.எம்.பி.நகர் மேற்குப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய சுத்திகரிப்பு நிலையம் அமையும் பகுதியில் இருந்து சத்தி நகராட்சி குடியிருப்புகளுக்கு குடிநீர் எடுக்குமிடம் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் பவானி ஆற்றில் கலப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும்.

மேலும், இத்திட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சனியன்று பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகளுடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் திட்டபணிகளை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதனடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். அதேநேரம், இத்திட்டத்தை கைவிடாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.